2024 ஜுலை 17 : நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள ஆர்வமுள்ள இளம் தொழில்முயற்சியாளர்களை ஈர்ப்பதற்கும் அவர்களை வலுப்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான போட்டித் தளமான SPARK திறமையான இளம் தொழில்முனைவோர் போட்டியானது 2024ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களைக் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 15 முதல் 30 வயதுவரையிலான இளம் தொழில்முனைவோர் இதில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
SPARK என்பது தொழில்முனைவு தொடர்பில் புதிய யோசனைகளைக் கொண்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை இலக்குவைத்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டி என்பதுடன், பாடசாலைப் பிரிவு மற்றும் திறந்த பிரிவு ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வளர்ந்துவரும் தொழில்முனைவோர் தமது யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்றுவதற்கான திறனை மேம்படுத்துவது இந்தப் போட்டியின் நோக்கமாகும்.
இந்தப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புவனேகபாகு பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இளம் தொழில்முனைவோரின் முன்னேற்றம் என்ற விடயத்துக்கு நாம் முன்னுரிமை அளித்திருப்பதுடன், இலங்கையின் எதிர்கால வர்த்தகத்துறையில் இளம் தொழில்முனைவோரின் வகிபாகத்தை அங்கீகரித்துள்ளோம். தனியார் துறையில் உள்ள எமது பங்காளர்களின் தீவிரமான ஒத்துழைப்புடன் SPARK தளத்தை விஸ்தரிப்பதற்கும், இளையோர் மத்தியில் அபிலாஷைகளை வளர்த்து, இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரின் திறனை வெளிக்கொண்டுவருவதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த வருட போட்டியாளர்களுக்கு விறுவிறுப்பான போட்டியொன்று காத்துக்கொண்டிருப்பதால், திறன் மிக்க இளைஞர் யுவதிகளின் பங்களிப்பை ஊக்குவிக்குமாறு பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.
தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக நடத்தப்படும் SPARK போட்டியானது, இளைஞர் யுவதிகளுக்கான எதிர்கால தொழில்முனைவு வாய்ப்புக்களை விரிவுபடுத்துகின்றது. கடந்த வருடத்தில் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் நிகழ்நிலை செயலமர்வுகள், வணிக முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள், ஆரம்பப் பயிற்சி முகாம்கள் மற்றும் நேருக்கு நேரான வழிகாட்டுதல்கள் மூலம் வணிகத் திட்டங்களைத் தயார்ப்படுத்துவதில் தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். வெற்றியாளர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் கிடைக்கக் கூடிய ஒரேயொரு வாய்ப்பாக இந்தியாவின் ஹைதராபாத்தில் புத்தாக்கமான பொருளாதார வலையமைப்பை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
சிறியதோர் யோசனை உலகில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிட்ட, கடந்த வருடத்தின் வெற்றியாளரான 16 வயதுடைய மிஹிந்தி மினுபமா பண்டார கருத்துத் தெரிவிக்கையில், “நான் பாரிய எதிர்பார்ப்புடனேயே SPARK போட்டிக்கு விண்ணப்பித்தேன். நான் அதில் சிறந்த வெற்றியைப் பெற்றேன். இதன் மூலம் எனது தொழில்முனைவுக்கு தெளிவானதொரு பாதை உருவானது. நாடு என்ற ரீதியில் முன்னேறுவதற்கு தொழில்முனைவு மிகவும் முக்கியமானது. வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்கு அவசியமான திறன்விருத்தியைப் பெற்றுக்கொள்ள SPARK போட்டி உதவியாக இருந்தது” என்றார்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்த அவர், “இந்த வருட SPARK போட்டியில் கலந்துகொள்ள உங்கள் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. SPARK போட்டியில் வெற்றியீட்டுவது மாத்திரமன்றி இந்தப் போட்டியில் கலந்துகொள்வதும் வெற்றியாகவே நான் கருதுகின்றேன். எனவே, உங்கள் கனவை நனவாக்குவதற்குக் கிடைத்திருக்கும் இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
மிஹிந்தியின் தந்தை லலித் சுஜீவ பண்டார குறிப்பிடுகையில், “எனது பிள்ளை அதிக ஆர்வத்தைக் காட்டியபோதும், பாடசாலைச் செயற்பாடுகளுக்கு மத்தியில் தொழில்முனைவுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நான் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சகல விடயங்களையும் சமாந்தரமாகச் செய்யக்கூடியவர். எனவே, SPARK போட்டியில் கலந்துகொண்டமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். பாரம்பரியமான தொழில்முனைவுப் பாதைகளுக்கு அப்பால் சென்று எதிர்காலத்தை வெற்றிகொள்ள இந்தப் போட்டியில் கலந்துகொள்வது முக்கியமானது. இளைஞர் யுவதிகள் தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் வெற்றிபெற மேலும் விரிவான வாய்ப்புக்கள் அவசியம். இதற்கு SPARK சிறந்த தளமாகும்” என்றார்.
பெற்றோரிடம் கோரிக்கை விடுத்த அவர், “தொழில்முனைவோராக வேண்டும் என உங்கள் பிள்ளைகள் ஆசைப்படுவதாக இருந்தால், தேவையான திறன்கள் மூலம் அந்தக் கனவை அடைவதற்கு அனுமதிக்கவும். இந்த வருட SPARK போட்டியில் அவர்கள் விண்ணப்பிப்பதற்கான ஊக்கத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
SPARK 2024போட்டிக்கு சர்வதேச தொழிலாளர் தாபனம், தெற்காசிய தொழில்முனைவுத் தலைமைத்துவத் திட்டம் என்பன அனுசரணை வழங்கியிருப்பதுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதி உதவி அளிக்கின்றது. ஆரம்ப வணிகங்களுக்கான சூழலை ஏற்படுத்துவது மற்றும் தொழில்முனைவில் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் இலங்கையில் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.
“இலங்கையின் இளம் தொழில்முனைவோருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பாக இந்தப் போட்டி அமைவதால், இதில் கலந்துகொள்வதற்கு விண்ணப்பியுங்கள். இதன் ஊடாக தற்பொழுது எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு அழைக்கின்றோம். தொழில்முயற்சிக்கான உலகில் இளைஞர் யுவதிகள் நுழையும்போது அவர்களை வலுப்படுத்துவதற்கான ஆதரவை வழங்குவதே எமது நோக்கமாகும். போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு இதன் ஊடாக திறன் அபிவிருத்தியும், சர்வதேச உலகில் வணிக வலையமைப்புக்களுடனான தொடர்புகளை ஏற்படுத்திச் சிறந்த பலனைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்” என சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் பிரதான தொழில்நுட்ப ஆலோசகர் கலாநிதி. தோமஸ் க்ரிங் தெரிவித்தார்.SPARK 2024 திறமையான இளம் தொழில்முனைவோர் போட்டியின் இறுதிப் போட்டி செப்டெம்பர் மாதம் நடைபெறும். தொழில்முயற்சி தொடர்பான இலட்சியத்தைக் கொண்ட மாணவர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களை https://spark.chamber.lk/ என்ற இணையத்தள இணைப்பின் மூலம் இப்போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு அழைக்கின்றோம். விண்ணப்ப முடிவுத் திகதி 2024 ஜுலை 30ஆம் திகதியாகும்.