INSEE இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டைக் குறைப்பதற்காக PLEASE செயற்திட்டத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுகிறது 

21

INSEE Cement நிறுவனம், இலங்கையில் நிலைபேணத்தக்க கழிவு முகாமைத்துவத்தில் முன்னோடியும், மற்றும் முன்னிலை வகிக்கும் வழங்குநருமான INSEE Ecocycle என்ற அதன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனத்தினூடாக, தெற்காசியாவில் பிளாஸ்திக் மாசற்ற ஆறுகள் மற்றும் கடல்கள் (Plastic Free Rivers and Seas for South Asia – PLEASE) செயற்திட்டத்துடனான அதன் ஒத்துழைப்பு குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டைக் குறைப்பதற்காக புத்தாக்கமான முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இச்செயற்திட்டம் INSEE Ecocycle நிறுவனத்திற்கு இடமளிக்கும்.         

உலோகம், இறப்பர் மற்றும் காகிதம் உள்ளிட்ட சிக்கலான கலவை காரணமாக மீள்சுழற்சி செய்யப்பட முடியாத கலவை பிளாஸ்திக் நிலைமையால் இலங்கை கணிசமான சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்த சிக்கலான நிலைமை மேற்பட்ட வகை கழிவுகளை செயன்முறைகளுக்கு உட்படுத்துவதில் மீள்சுழற்சியாளர்களுக்கு செலவையும், சவாலையும் விளைவித்துள்ளதுடன், பெருந்தொகையான பிளாஸ்திக் கழிவுகள் நிலப்பரப்பில் வீசப்படுகின்றன. இச்செயற்திட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட சவாலைச் சமாளிப்பதற்கு INSEE Ecocycle சமூகத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படும்.    

புத்தளத்தில் பெண்கள் தலைமையிலான மூலப்பொருள் மீட்பு ஆலையை (Material Recovery Facility – MRF) நிறுவுவதே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம். இந்த ஆலையில் மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய பிளாஸ்திக் கழிவு மதிப்புமிக்க வளங்களாக மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த மூலப்பொருட்களை உற்பத்திச் செயல்முறைகளுக்கு திசைதிருப்பி விடுவதன் மூலமாக, கன்னி மூலப்பொருட்களுக்கு பதிலாக, மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதால் இடைவெளியை நிரப்பி, சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளுக்கு பங்களிப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.  

PLEASE செயற்திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி அளிப்பதுடன், செயற்திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் (United Nations Office for Project Services – UNOPS) துணையுடன், தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தால் (South Asia Cooperative Environment Program – SACEP) நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தெற்காசிய கடற்பரப்பில் பிளாஸ்திக் மாசுபாடு சென்றடைவதைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதே இதன் நோக்கம். இரு தசாப்த காலத்திற்கும் மேற்பட்ட நிபுணத்துவத்தைக் கொண்ட INSEE Ecocycle, இலங்கையில் கழிவு அகற்றல், மீட்பு மற்றும் ஒட்டுமொத்த கழிவு முகாமைத்துவத்தில் அனைத்தையும் முற்றிலும் மாற்றியமைக்கும் ஒரு செயல்பாட்டாளராக வளர்ச்சி கண்டுள்ளது.       

“PLEASE செயற்திட்டத்துடன் ஒத்துழைப்பது எமக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றது. பிளாஸ்திக் கழிவு எமது சமுத்திரப் பரப்பில் அனைத்துப் பாகங்களிலும் ஊடுருவியுள்ளதுடன், சூழல்தொகுதிகளை அழிவுக்குள்ளாக்கி, கடல்வாழ் உயிரினங்களை அழித்து வருகின்றது,” என்று INSEE Ecocycle இன் பொது முகாமையாளர் சுஜித் குணவர்த்தன அவர்கள் குறிப்பிட்டார். “இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டுப் பிரச்சினைக்கு எதிராக அலையை திசைதிருப்பும் அதேசமயம், பெண்கள் மற்றும் உள்ளுர் சமூகங்களுக்கு வலுவூட்ட முடியும்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.    

பெண்களின் தலைமைத்துவத்துடனான மூலப்பொருள் மீட்பு ஆலையை ஸ்தாபிப்பது உள்ளுர் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதுடன், அவர்களுக்கு நிலையான வருமான மூலத்தை ஏற்படுத்தி, வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கும். பெண்களுக்கு வலுவூட்டி, அவர்களுக்கு நிதியியல் சுதந்திரத்தை வழங்குவதனூடாக வறுமையைக் குறைத்து, அப்பிராந்தியத்திலுள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, பாலின சமத்துவம் மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கம். கடுமையான தரம் பிரிக்கும் நடைமுறை, முழுமையாக கழுவி, மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியன மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்திக்கின் சந்தை மதிப்பை அதிகரித்து, நடைமுறைச்சாத்தியமான பொருளாதாரக் கட்டமைப்பைத் தோற்றுவிக்கும்.      

பிளாஸ்திக் மீள்சுழற்சி என்பதற்கும் அப்பால், உலோகங்கள் மற்றும் டயர்கள் போன்ற ஏனைய மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்களின் சேகரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை உள்ளிணைக்கும் வகையில் இச்செயற்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

முறையான கழிவு அகற்றல் குறித்து சமூகத்தின் ஈடுபாட்டு அதிகரித்து, விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, இச்செயற்திட்டத்தின் போது பல்வேறுபட்ட கடற்கரை மற்றும் களப்பு சிரமதான நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. சுழற்சிப் பொருளாதார முறைமை மற்றும் மேம்பட்ட மீள்சுழற்சி செய்யப்பட்ட பொதியிடலின் நிதியியல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக பொதியிடல் உற்பத்தியாளர்களுடன் கூட்டு செயலமர்வுகளும் இச்செயற்திட்டத்தில் அடங்கியுள்ளன. இலங்கையில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள Extended Producer Responsibility (EPR) கொள்கைகள் மற்றும் பிளாஸ்திக் மதிப்பு முயற்சிகளுடனும் இந்த ஈடுபாடு ஒன்றியுள்ளதுடன், நிலைபேணத்தக்க நடைமுறைகள் மீதான ஆழமான அர்ப்பணிப்பையும் வளர்க்கின்றது.     

தெற்காசியாவில் ஆண்டுதோறும் 334 மில்லியன் மெட்ரிக் தொன் திடக் கழிவுகள் தோற்றுவிக்கப்படுவதுடன், இவற்றுள் சுமார் 70% முதல் 80% சமுத்திரங்களைச் சென்றடைகின்றன. பிராந்திய நீர்ப்பரப்புக்களில் பிளாஸ்திக் மாசுபாட்டைச் சமாளிப்பதற்கு புத்தாக்கமான தீர்வுகளுக்கு ஆதரவளித்து, எதிர்காலத் தலைமுறைகளுக்காக, தூய்மையான மற்றும் இன்னும் சிறப்பான வழியில் நிலைபேணத்தக்க சூழலைத் தோற்றுவிப்பதை PLEASE செயற்திட்டம் முன்னெடுக்கின்றது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here