DFCC Remittances தீர்வானது அதிகபட்ச சௌகரியம் மற்றும் வரப்பிரசாதங்களுடன் நாட்டிற்கு பணத்தை அனுப்புவதற்கான முதல் தெரிவாக தனது ஸ்தானத்தை உறுதிப்படுத்தியுள்ளது

36

வெளிநாட்டில் வதியும் இலங்கையர்கள் தங்குதடையின்றி, பாதுகாப்பாக, விரைவாக மற்றும் கட்டுபடியான கட்டணங்களுடன் இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கான சேவையை DFCC Remittances தீர்வு தொடர்ந்தும் சிறப்பாக வழங்கி வருகின்றது. சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கைச் சமூகத்தினர், இலங்கையிலுள்ள தமது அன்பிற்குரியவர்களுக்கு சிரமமின்றி பணத்தை அனுப்பி வைப்பதற்கு இடமளிக்கும் வகையில் அவர்களுக்கு சௌகரியமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. 11 கூட்டாளர்கள் வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு, உள்நாட்டு வங்கிக் கணக்குகளுக்கு நிகழ்நேரத்தில் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பணத்தை நேரடியாக அனுப்புவதை DFCC Remittances உறுதி செய்கின்றது.

தற்போது சர்வதேசம் எங்கிலும் நன்மதிப்புடைய பணப்பரிமாற்ற நிறுவனங்களின் கூட்டாண்மை மூலமாக தனது சேவைகளை மேலும் பல நாடுகளுக்கும், இடங்களுக்கும் DFCC Remittances விஸ்தரித்து வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், பணத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் டிஜிட்டல்ரீதியாகவும், நேரடியாகவும் அல்லது தமது டெபிட் அட்டைகளை உபயோகித்து அவற்றை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக நிகரற்ற வகையில் LankaPay ஏடிஎம் மையங்களினூடாக பெற்றுக்கொள்ளும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் தனது உள்நாட்டுப் பிரசன்னத்தின் அனுகூலத்தைச் சிறப்பாக உபயோகித்து வருகின்றது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்கள் மற்றும் ஏனைய நிதிச் சேவைகளை தனது சேவை மூலமாக பணத்தை அனுப்பி வைக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு DFCC Remittances வழங்கி வருகின்றது.

DFCC வங்கியின் வெளிநாட்டு வங்கிச்சேவை, பணம் அனுப்பும் சேவை மற்றும் வணிக மேம்பாட்டுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி அன்டன் ஆறுமுகம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வெளிநாடுகளில் வசிக்கின்ற, தொழில் புரிகின்ற இலங்கையர்கள் தங்குதடையின்றி, இலகுவாக மற்றும் எளிமையான வழிமுறையில் பணத்தை அனுப்பி வைக்கும் அதேசமயம், இலங்கையில் அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு அனுப்பிவைக்கப்படுகின்ற நிதியை தங்குதடையின்றி பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதே எமது நோக்கம். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சௌகரியத்தை வழங்க வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தியே DFCC Remittance சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியியல்ரீதியான அறிவு, புத்தாக்கமான சேவைகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் ஆகியவற்றில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பே புலம்பெயர் பணியாளர்கள் மத்தியில் தமது பணத்தை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான விருப்பத்திற்குரிய தெரிவாக எம்மை மாற்றியுள்ளது. ஆகவே எமது சாதனைகளையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், சர்வதேசத்திலுள்ள இலங்கைச் சமூகத்திற்கு தங்குதடையின்றிய மற்றும் நம்பகமான பணம் அனுப்பும் சேவைகளை தொடர்ந்து வெற்றிகரமாக வழங்குவதற்கு ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC Remittances இன் மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறன் மற்றும் தொழிற்துறைக்கு அதன் பங்களிப்புக்களுக்கான அங்கீகாரமாக, இலங்கையில் வெளிநாட்டு வருமான மேம்பாட்டுக்கான அதன் மகத்தான பங்களிப்புக்களுக்காக இத்தளத்திற்கு மதிப்பிற்குரிய “ADFIAP Merit Award 2023”  விருது வழங்கப்பட்டது. மகத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் DFCC Remittances இன் அர்ப்பணிப்பை இங்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டிற்கு பணம் அனுப்பும் துறையில் அதன் முன்னோடி ஸ்தானத்தையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.  

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் இஸ்ரேல் போன்ற முக்கிய பிராந்தியங்களில் DFCC வணிக ஊக்குவிப்பு அதிகாரிகளின் நியமிக்கப்பட்டமை, இந்த முக்கியமான சந்தைகளில் வணிக மார்க்கங்களை விரிவுபடுத்தி, வலுவான பிரசன்னத்தை ஏற்படுத்துவதற்கு அத்திவாரமிட்டன. பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டுள்ள குருணாகல் பிராந்தியத்தைச் சூழ முன்னெடுக்கப்பட்ட ஒரு விரிவான விழிப்புணர்வுப் பிரச்சாரமானது DFCC Remittances இன் அடைவுமட்டத்தை பெருக்க வழிகோலியது. இத்தகைய முயற்சிகள் இத்தளத்தின் வெற்றிக்கு பங்களித்துள்ளன.

கூட்டாளர்களுடனான ஒன்றுபட்ட முயற்சிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான விஜயங்கள் மற்றும் நாட்டை விட்டுப் புறப்படும் முன்னர் வழங்கப்படுகின்ற கடன் திட்டமான “DFCC Ethera Saviya”  இன் விளம்பர ஊக்குவிப்பு ஆகியனவும் இத்தளத்தின் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கு பெரும் பங்களித்துள்ளன. புலம்பெயர் பணியாளர்களுக்காக பெறுமதிவாய்ந்த நுண்ணறிவுகளை வழங்கும் வகையில் இலங்கையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதியறிவு சார்ந்த கையேடொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் இணைந்ததாக புலம்பெயர் பணியாளர்களின் நலனுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி மையங்களில் நிதியறிவு சார்ந்த விழிப்புணர்வு அமர்வுகளும் DFCC வங்கியால் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டானது DFCC Remittances க்கு சாதனை மிக்கதொரு ஆண்டாக அமைந்துள்ளதுடன், நாட்டிற்கு பணத்தை அனுப்புவதில் மகத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்புக்கு சான்றுபகருகின்றது. DFCC Remittances தொடர்ந்தும் பரிணாம வளர்ச்சி கண்டு, தனது அடிச்சுவட்டை விஸ்தரிக்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார நலனுக்கு முக்கியமான பங்களிப்பினை வழங்கி, ஒப்பற்ற சேவைகளை புலம்பெயர் பணியாளர்களுக்கு வழங்குவதில் தொடர்ந்தும் அவர்களுடைய விருப்பத்திற்குரிய கூட்டாளராக திகழ்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here