DFCC வங்கி மற்றும் Mintpay ஆகியன டெபிட் அட்டைதாரர்களுக்கு ‘Buy Now, Pay Later’ சலுகையை வழங்குவதற்காக புத்தாக்கம்மிக்க கூட்டாண்மையை முன்னெடுக்கின்றன    

17

இலங்கையில் டிஜிட்டல் நிதியியல் சேவைகளை வழங்குவதில் முன்னோடியான DFCC வங்கி, நாட்டிலுள்ள முதன்மை நிதியியல் செயலியான (app), Mintpay உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை முன்னெடுப்பது குறித்து அறிவித்துள்ளது. இக்கூட்டாண்மை மூலமாக, சந்தையில் பொதுவாகப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு வசதியாகக் காணப்படுகின்ற “Buy-Now-Pay-Later” (BNPL) மற்றும் “Pay Now” போன்ற தனித்துவமான கொடுப்பனவுத் தெரிவுகள் டெபிட் அட்டைதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. DFCC வங்கியின் இணைய வழி கொடுப்பனவு நுழைமுகத்தை Mintpay உடன் ஒருங்கிணைப்பதன் மூலமாக, டெபிட் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிதியியல் நெகிழ்திறனை மேம்படுத்தி, நிதித் துறையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு நாம் வழிகோலவுள்ளோம்.        

DFCC வங்கி தனது டெபிட் அட்டைதாரர்களுக்கு BNPL க்கான கவர்ச்சிகரமான தெரிவுகளை வழங்கும் அதேசமயம், வங்கியின் இணையவழி கொடுப்பனவு நுழைமுகம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் விரிவான வலையமைப்பின் அனுகூலத்தின் பயனை Mintpay அனுபவிக்கும். அந்த வகையில், எந்தவொரு டெபிட் அட்டைதாரரும் தற்போது “Pay Now” அல்லது “BNPL” தெரிவைக் கொண்டிருப்பதுடன், Mintpay மூலமாக இணையவழி மற்றும் விற்பனை மையங்களில் தாம் மேற்கொள்கின்ற கொள்வனவுக்கு செலவிடுகின்ற தொகையை வட்டியின்றிய, மூன்று தவணைக் கொடுப்பனவுகளாக செலுத்த முடியும். தமது வாடிக்கையாளர்கள் மத்தியில் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை பூர்த்தி செய்து, எந்தவொரு அட்டைதாரருக்கும் தமது விருப்பத்திற்கமைவாக, சௌகரியமான கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த நெகிழ்தன்மை பிரதிபலிக்கின்றது.           

DFCC வங்கியின் உப தலைவரும்/அட்டை மையத்தின் தலைமை அதிகாரியுமான டென்வர் லூயிஸ் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “வணிகர்களுக்கும், டெபிட் அட்டைதாரர்களுக்கும் Buy-Now- Pay-Later கொடுப்பனவுத் தெரிவுடன், தங்குதடையின்றிய இணையவழி அனுபவத்திற்கு இடமளிக்கும் வகையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது கொடுப்பனவுத் தளமான Mintpay உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். மின்-வணிக வர்த்தகர்களுக்கு கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளும் புதிய கருவியை அறிமுகப்படுத்தி, டெபிட் அட்டைதாரர்களுக்கு அவர்களுடைய கொடுப்பனவுகளின் போது தவணைக் கொடுப்பனவுத் தெரிவை வழங்கி நிதியியல் உள்ளடக்கத்துடன், புதியதொரு தரஒப்பீட்டு நியமத்தை இக்கூட்டாண்மை நிலைநாட்டியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.       

DFCC வங்கி மற்றும் Mintpay ஆகிய இரண்டுக்கும் சந்தை அடைவுமட்டத்தை விரிவுபடுத்துவதற்கு இக்கூட்டாண்மை வழிகோலும் என்பது மிகவும் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். DFCC வங்கியின் இணையவழி கொடுப்பனவு நுழைமுகத்தினூடாக BNPL தெரிவுகளை வழங்குவதால், Mintpay பரந்த வாடிக்கையாளர் தளத்தை எட்டி, தனது சந்தைப் பிரசன்னத்தை கணிசமாக விஸ்தரிக்க இது உதவும். அவ்வாறே, இக்கூட்டாண்மையினூடாக அதிகரித்த கொடுப்பனவு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட தெரிவுநிலை ஆகியவற்றின் பயனை DFCC வங்கி பெற்றுக்கொள்ளும். இரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து, நிதியியல் துறைக்கு மீள்வடிவம் கொடுத்து, நிதியியல் உள்ளடக்கத்தில் புதிய தராதரங்களை நிலைநாட்டுவதே இக்கூட்டாண்மையின் மூலமாகும். Mintpay இன் நிதித்துறை தலைமை அதிகாரி பியுமா விஜேசிங்க அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “Mintpay தொழில்நுட்பத்தின் துரிதமான செயல்பாட்டுத்திறன் வலுவான கூட்டாண்மைகளை ஸ்தாபிப்பதற்கு வழிகோலியுள்ளதுடன், இலங்கையில் நிதியியல் உள்ளடக்கத்தில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை ஏற்படுத்தி, நெறிமுறை தவறாத நுகர்வோர் நடத்தையை முன்னெடுப்பதில் DFCC வங்கியுடனான எமது ஒத்துழைப்பு அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.             

DFCC வங்கி மற்றும் Mintpay ஆகியன கைகோர்த்துள்ளமை இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவை மற்றும் நிதியில் முக்கியமான ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது. புத்தாக்கத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு முன்செல்லும் ஒரு கூட்டு முயற்சியாக இது காணப்படுகின்றது. அந்த வகையில், பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றி, நிதியியல் உள்ளடக்கம் மற்றும் நெறிமுறை தவறாத நுகர்வோர் நடத்தை ஆகியவற்றின் புதிய தராதரங்களை இக்கூட்டாண்மை நிலைநாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here