DFCC வங்கி, புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு வலுவூட்ட நிதியியல் அறிவூட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது

32

அனைவருக்கும் ஏற்ற வங்கியும், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் புத்தாக்கத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற வங்கியுமான DFCC வங்கியானது, “இலங்கையின் ஒவ்வொரு புலம்பெயர்ந்த பணியாளரின் கதையும் இதுவா?” (Is this Every Sri Lankan Migrant Worker’s Story? – Rata Yana Api Hamogema Kathawada Meh?) என்ற தலைப்பில் தனது புதிய நிதியியல் அறிவூட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், புலம்பெயர்ந்த பணியாளர்களை வலுவூட்டும் நோக்கில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. DFCC வங்கியின் பணம் அனுப்பல் சேவைப் பிரிவால் முன்னெடுக்கப்படும் இந்த அறிமுகமானது, நிதியியல் அறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு அவர்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை முறையான வழிகளில் தாயகத்திற்கு அனுப்புவதன் நன்மைகள் குறித்து அறிவூட்டுவதையும், அதேசமயம், நாட்டிற்குள் வெளிநாட்டு நாணய வரத்து அதிகரிப்பதற்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள், புலம்பெயர்ந்த பணியாளர் சமூகத்தை மேம்படுத்துவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். “அனைவருக்கு ஏற்ற வங்கி என்ற வகையில், அறிவுபூர்வமான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்ள, எமது சர்வதேச புலம்பெயர் பணியாளர்கள் சமூகம் அடங்கலாக, எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவையும், கருவி வளத்தையும் வழங்கி வலுவூட்ட வேண்டும் என நாம் நம்புகின்றோம். இந்த நிதியியல் அறிவூட்டல் வழிகாட்டியானது புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களின் நிதியியல் எதிர்காலத்தை சிறப்பாகப் பாதுகாப்பதற்கும், இலங்கைக்கு வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தருபவர்களாக, அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுகின்ற எமது வழியாகும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கியின் நிதியியல் அறிவூட்டல் வழிகாட்டி புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு அத்தியாவசியமான நிதியியல் அறிவை வழங்குவதால், அவர்களின் நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டு தீர்மானங்களுக்கு நம்பகமான வழிகாட்டியாக இது அமைகிறது. அவர்களின் நிதியியல் அறிவை மேம்படுத்துவதன் மூலம், இந்த இலங்கையர்கள் தங்கள் நிதியியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், தாயகத்தில் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சிறப்பாகத் தயாராக இருப்பார்கள்.

கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாடு ஆகியவற்றின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆண்டன் ஆறுமுகம் அவர்கள், இந்த முயற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்து வெளியிடுகையில், “நமது பொருளாதாரத்திற்கு உதவுவதில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதுடன், நமது சமூகத்தின் முக்கிய அங்கமாகவும் உள்ளனர். இந்த வழிகாட்டி அவர்கள் தேடுகின்ற முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், தாயகத்திற்கு பணத்தை அனுப்புவதில் முறைசாரா வழிமுறைகளை நம்பியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், அதே வேளையில், சட்டபூர்வமான வங்கி மார்க்கங்களைப் பயன்படுத்தி தாயகத்திற்கு பணம் அனுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பில் அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது. மேலும், புலம்பெயர்ந்த பணியாளர்களை இலக்காகக் கொண்டு பிராந்திய மட்டத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் நாம் அறிவூட்டல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.

திமால் பெரேரா – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி (DFCC வங்கி பிஎல்சி) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிறுவன விவகாரங்களுக்கான உதவிப் பொது முகாமையாளரான எல். ஏ. பீ. கே. லியன்வல அவர்களுக்கு வழிகாட்டியின் பிரதியை சம்பிரதாயபூர்வமாக வழங்குகிறார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன், அதன் நிறுவன விவகாரங்களுக்கான உதவிப் பொது முகாமையாளர் திரு எல்.ஏ.பீ.கே.லியன்வல அவர்களின் தலைமையில், DFCC வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் இந்த வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வின் போது, அவர் சரியான நேரத்தில் வங்கி எடுத்துள்ள முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்து வெளியிடுகையில், “புலம்பெயர்ந்த பணியாளர்களிடையே நிதியியல் அறிவை ஊக்குவிப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம். இந்த முயற்சியானது புலம்பெயர்ந்த பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் எமது பகிரப்பட்ட இலக்குடன் ஒன்றிணைந்துள்ளது. அறிவுபூர்வமான மற்றும் நிதியியல் ரீதியாக தகவலறிந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் இறுதியில் தேசத்திற்கு சாதகமாக பலனளிக்கும் வகையில் செயல்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்த பணியாளர்களிடையே நிதியியல் அறிவை ஊக்குவிப்பதற்கான DFCC வங்கியின் அர்ப்பணிப்பு, நிதியியல் ரீதியாக உள்ளடக்கிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் இலக்கினைப் பிரதிபலிக்கிறது. இந்த வழிகாட்டி மூலம், DFCC வங்கி சிறந்த நிதியியல் தீர்மானங்களை எடுப்பதற்கு இடமளிப்பதுடன், பொறுப்பான மற்றும் பாதுகாப்பான வழிகளில் தாயகத்திற்கு பணம் அனுப்பும் நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியானது DFCC வங்கியின் நிலைபேற்றியல் மூலோபாயத்துடன் இணைந்துள்ளதுடன், நிலைபேண்தகு நிதிவசதி மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறை மூலம் வலுவான சமூகங்களை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இடமிருந்து வலமாக – இஷானி குடாகமகே, DFCC வங்கி பிஎல்சி, டபிள்யூ. ஏ. கே குமாரி, பிரதிப் பொது முகாமையாளர், நிதி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அன்டன் ஆறுமுகம் – சிரேஷ்ட துணைத் தலைவர், கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாடு, DFCC வங்கி பிஎல்சி, திமால் பெரேரா, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, DFCC வங்கி பிஎல்சி, எல். ஏ. பீ. கே. லியன்வல, உதவிப் பொது முகாமையாளர், நிறுவன விவகாரங்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நில்மினி குணரத்ன, துணைத் தலைவர்/ சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலின் தலைவர், DFCC வங்கி பிஎல்சி, இரங்க அமிலான, உதவித் துணைத் தலைவர் – கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக மேம்பாடு, DFCC வங்கி பிஎல்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here