DFCC வங்கி, பசுமை மீது காண்பிக்கும் ஈடுபாட்டுக்காக CPM Best Management Practices Company Awards 2024 நிகழ்வில் மூன்று விருதுகளை வென்றுள்ளது  

35

Institute of Chartered Professional Managers of Sri Lanka (CPM) இன் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற CPM Best Management Practices Company Awards 2024 விருதுகள் நிகழ்வில் ஒட்டுமொத்த வெற்றியாளர் – தங்கம் என்ற விருதை DFCC வங்கி தனதாக்கியுள்ளது. இந்த உச்ச ஸ்தானத்திற்குப் புறம்பாக, வங்கியின் மூலோபாய நிலைபேறாண்மை வேலைத்திட்டத்திற்கு அமைவாக, வங்கி தனது கிளை வலையமைப்பு முழுவதுமாக முன்னெடுத்த காகிதம் இன்றி செயல்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிக்காக வங்கித் துறையின் வெற்றியாளர் – தனியார் துறைப் பிரிவு மற்றும் மிகச் சிறந்த முகாமைத்துவ நடைமுறைக்கான மகத்துவத்திற்கான விருது ஆகியவற்றையும் DFCC வங்கி வென்றுள்ளது. அசங்க உடுவல – பிரதம செயல்பாட்டு அதிகாரி, நில்மினி குணரட்ன – உப தலைவர், சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மை தலைமை அதிகாரி, மற்றும் நளின் கருணாதிலக – உப தலைவர், நிலைபேறாண்மை ஆகியோர் அடங்கிய குழுவினர் DFCC வங்கியின் சார்பில் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.            

2030 ஆம் ஆண்டில் காபன் நடுநிலை வகிக்கும் வங்கியாக மாற வேண்டும் என்ற தனது நோக்கத்தினூடாக, நேர்மறை சமூக மற்றும் சூழல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை பெருமதிப்பு மிக்க இவ்விருதுகள் பிரதிபலிக்கின்றன. காகிதங்கள் இன்றிய செயல்பாடுகளினூடாக வளத்திறனில் வங்கி செலுத்தியுள்ள கவனம் இந்த இலக்கிற்கு மிகவும் முக்கியமானதொரு பங்களிப்பாக உள்ளது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் உள்ளகரீதியாக 100% காகிதமின்றிய செயல்பாடுகளை எட்டவும், 2025 ஆம் ஆண்டில் வெளிப்புறரீதியாக 50% காகிதமின்றிய செயல்பாடுகளை எட்டவும் DFCC வங்கி திட்டமிட்டுள்ளது.   

இந்த அங்கீகாரம் குறித்து நில்மினி குணரட்ன – உப தலைவர், சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேறாண்மை தலைமை அதிகாரி, DFCC வங்கி, அவர்கள் கருத்து வெளியிடுகையில், “10 ஆண்டுத் திட்டம் அடங்கலாக, நிறுவனத்தின் மத்தியில் முறையான நிலைபேறாண்மை மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்திய இலங்கையிலுள்ள முதல் வங்கி என்ற பெருமை எம்மையே சாரும். Green Climate Fund (GCF) இடமிருந்து சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதல் மற்றும் ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற பெருமையும் எம்மையே சாரும். மக்கள், பூமி மற்றும் இலாபம் என மும்முனை இலக்கினைப் பேணும் எமது கோட்பாட்டை நாம் ஓயாது முன்னெடுத்து வருவதுடன், எமது நீண்ட கால நிலைபேணத்தகு வளர்ச்சி மற்றும் இலாபத்திறனை அதன் மூலமாக உறுதி செய்கின்றோம். ஆகவே, DFCC வங்கியில் “நிலைபேண்தகைமை என்பது இயங்கும் முறை” (Sustainability a way of life) என்பதைப் பின்தொடரும் எமது முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் இவ்விருதுகளை மிகவும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த அங்கீகாரத்தை எமக்கு வழங்கிய CPM க்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன், எதிர்காலத்தில் நிலைபேணத்தகு வங்கிச்சேவை மற்றும் அபிவிருத்தி என்பதை மேம்படுத்துவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்துகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.                

காகித பயன்பாட்டைக் குறைப்பதில் வங்கி மேற்கொண்டுள்ள முயற்சிகள், காகித குறைப்பு தொடர்பான அதன் பணிக்குழுவினால் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், அவர்கள் நிகழ்த்திய படைப்பாக்கம் நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. வணிக நடைமுறை மேம்பாடுகள், உள்ளகத்தில் காகிதமின்றிய சான்று அங்கீகாரங்கள், Google Drive cloud தீர்வுகள் மற்றும் பணிப்பாய்ச்சல்களின் பயன்பாடு, இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்கள் மற்றும் பசுமை மார்க்கங்கள், சந்தைப்படுத்தல் பொருட்களின் இலத்திரனியல் வடிவங்கள், இலத்திரனியல் சம்பளச்சிட்டைகள் இதில் அடங்கியிருந்ததுடன், இவ்விருதுகளுக்கான மூன்று பிரிவுகளிலும் இவை சுட்டிக்காட்டப்பட்டன.        

11வது CPM மாநாட்டின் படைப்பாக்க நிகழ்வில் DFCC வங்கியின் மறுசீராக்க நடைமுறைகள் மற்றும் வணிக செயல்பாடுகளை காகித பாவனையின்றி முன்னெடுப்பதை ஊக்குவித்தல் ஆகியன விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பணிப்பிரிவுகள் மத்தியில் காகித பாவனையை 85% ஆல் குறைக்கும் இலக்குடன், ஒரு விரிவான, காகித பாவனையின்றியமைக்கான உள்ளக சான்று அங்கீகாரத் திட்டத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதை விட, கணக்கொன்றை ஆரம்பிப்பதை டிஜிட்டல் வழிமுறையில் முன்னெடுக்கும் முறைமையை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளதுடன், எவ்விதமான காகித ஆவணப்படுத்தல் நடைமுறைகளுமின்றி வாடிக்கையாளர்கள் இதனை மேற்கொள்ள இடமளிக்கும் அதேசமயம், காகித பயன்பாட்டை மேலும் குறைக்கும் நோக்கில், உள்ளக பரிவர்த்தனைகளுக்கும், அனேகமான வெளிப்புற தொடர்பாடல்களுக்கும் டிஜிட்டல் கையொப்பங்களை ஏற்றுக்கொள்கின்றது.           

காகித பயன்பாட்டைக் குறைத்து, வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்துவதில் சூழல்நேய தயாரிப்புக்கள் மற்றும் மார்க்கங்களை ஊக்குவித்து வரும் DFCC வங்கியின் மும்முரமான முயற்சிகளும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டன. தற்போது வங்கிக் கணக்குப் புத்தகங்கள் அனைத்தும் இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்களாக மாற்றப்பட்டு வருவதுடன், இலத்திரனியல் வடிவ கணக்குக்கூற்றுக்களே நிரந்தரமான கணக்குக்கூற்று வடிவமாக்கப்பட்டு வருகின்ற முயற்சியும் இதில் உள்ளடங்கியுள்ளது. EKYC நடைமுறையை டிஜிட்டல்ரீதியாக முன்னெடுக்கும் செயல்பாடுகளும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காகித பயன்பாட்டுடனான ஆவண நடைமுறையை இது மேலும் கணிசமாக குறைக்க உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. DFCC Virtual Wallet, DFCC இணைய வங்கிச்சேவை, Metaverse இலுள்ள ஒரு மெய்நிகர் வங்கிக் கிளையான DFCC Galaxy போன்ற குறிப்பிடத்தக்க டிஜிட்டல் தீர்வுகள், சந்தைப்படுத்தல் பிரசுரங்களின் இலத்திரனியல் வடிவங்கள் ஆகியனவும் பயனர் அனுபங்களை மேம்படுத்தும் அதேசமயம், நிலைபேணத்தகு மற்றும் திறன்மிக்க வங்கிச்சேவை முறைமைக்கு பங்களிப்பது தொடர்பில் நிகழ்வில் காண்பித்து, விளக்கமளிக்கப்பட்டது.         

ஊழியர்களும் ஒவ்வொருவரும் அச்சிடுகின்ற மற்றும் ஆவணங்களை நகலெடுக்கின்ற எண்ணிக்கைகளை கண்காணிக்கும் வகையில் அனைத்து பிரின்டர்கள் மற்றும் போட்டோபிரதி இயந்திரங்களில் மென்பொருள் நடைமுறையொன்று இணைக்கப்பட்டு, தேவையின்றி எவற்றையும் அச்சிடுவதைக் குறைக்கும் DFCC வங்கியின் முயற்சிகளும் நிகழ்வில் கவனத்தை ஈர்த்தன. இந்த நடைமுறைகள் மூலமாக நடத்தை மாற்றங்கள் ஏற்பட்டன. அத்துடன் பல்வகைப்பட்ட ஆவணங்களை அச்சிடுவதை நிறுத்தி, பகிரப்பட்ட cloud drive தொழில்நுட்பங்கள் மூலமாக மென்பிரதிகளை ஆவணப்படுத்துவதற்கு கிளைகள் மற்றும் பணிப்பிரிவுகளை வங்கி ஊக்குவித்து வருகின்றது. பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவ சபைகளுக்கு அறிக்கைகளை இலத்திரனியல் வடிவில் சமர்ப்பிப்பதும் ஒரு வழக்கமான நடைமுறையாக மாறி வருகின்றது. இது காகித நுகர்வு மற்றும் கழிவை திறன்மிக்க வழியில் குறைக்க வழிகோலுகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் நேர்மறையான சூழல் மற்றும் சமூக பலாபலன்களை அறுவடை செய்ய வழிகோலியுள்ளதுடன், நிலைபேண்தகமை மீது DFCC வங்கியின் அர்ப்பணிப்புடன் ஒத்திசைகின்றன.            

இவ்வாறு அளவிடக்கூடிய பலன்களுக்குப் புறம்பாக, நிலைபேற்றியல் மீதான DFCC வங்கியின் அணுகுமுறையானது வங்கி மற்றும் பரந்த இலங்கைப் பொருளாதாரத்திற்கும் கணிசமான நேர்முறை விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இம்முயற்சிகள் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் திருப்தியை மேம்படுத்தி, வணிக வளர்ச்சியை முன்னெடுத்து, பசுமை வர்த்தகநாமம் என்ற வங்கியின் தோற்றத்தை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி, போட்டித்திறன் அனுகூலத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. ஊழியர்களைப் பொறுத்தவரையில், உத்வேகம், பணி மீதான திருப்தி, மற்றும் சௌகரியம் ஆகியவற்றுக்கு உதவி, அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றும் நலன் மீது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேலும், பொருளாதாரத்திற்கான பங்களிப்பை எடுத்துக்கொண்டால், நிலைபேண்தகைமை மீதான DFCC வங்கியின் அர்ப்பணிப்பானது சூழல்நேய மற்றும் நிலைபேணத்தகு வணிகங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, காகிதங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்ப்பதால் அந்நியச்செலாவணியை சேமிக்க வழிகோலுகின்றது. ஆகவே, இம்முயற்சிகள் அனைத்தும், நிலைபேணத்தகு மற்றும் காகிதங்களின்றிய எதிர்காலத்தை நோக்கிய DFCC வங்கியின் முற்போக்கான சிந்தனைகள் தெளிவாகப் புலனாகின்ற சூழல் மற்றும் சமூக நன்மைகளை விளைவிப்பதை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here