DFCC வங்கி, இலங்கையில் முதல்முறையாக இடம்பெறும் சர்வதேச Faldo கோல்ஃப் சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவது குறித்து அறிவித்துள்ளது

19

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச Faldo ஜுனியர் கோல்ஃப் சுற்றுப்போட்டி மற்றும் Pro-Am 2025 நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்கி, தனது வகிபாகம் குறித்து DFCC வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வை முதல்முறையாக நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளதைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமான ஒரு சாதனை மைல்கல்லாக மாறியுள்ளது. 2025 ஜனவரி 7 முதல் 9 வரை மிகவும் அழகிய சூழலைக் கொண்ட றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தில் இது இடம்பெறவுள்ளதுடன், இளம் கோல்ஃப் வீரர்கள் இலங்கையிலேயே சர்வதேச மேடையொன்றில் தமது திறமைகளை காண்பிப்பதற்கான தனித்துவமான அரிய வாய்ப்பினை இச்சுற்றுப்போட்டி அவர்களுக்கு வழங்குகின்றது.       

ஆறு தடவைகள் Major Champion பட்டத்தை வென்ற புகழ்பூத்த வீரர் சேர் நிக் ஃபால்டோ அவர்களால் 1996ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Faldo Series ஆனது உலகின் மிகப் பாரிய மற்றும் மிகவும் நன்மதிப்புப் பெற்ற ஜுனியர் கோல்ஃப் போட்டித்தொடராகத் திகழ்ந்து வருகின்றது. எதிர்கால கோல்ஃப் நட்சத்திரங்களை வளர்த்தெடுக்கும் போற்றத்தக்க பாரம்பரியத்துடன், இத்தொடரானது வருடந்தோறும் 28 நாடுகளில், 38 சுற்றுப்போட்டிகளில் 7,000 க்கும் மேற்பட்டவர்களை பங்குபற்றுவதற்கு ஈர்த்து வருகின்றது. கோல்ஃப் உலகில் கொண்டாடப்படுகின்ற ஒரு மேதையான சேர் நிக் அவர்கள் இளம் வீரர்கள் தமது திறமைகளைப் பட்டை தீட்டி, சர்வதேச அனுபவத்தைப் பெற்று, மற்றும் எதிர்கால வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற தமது கனவுகளை மேற்கொண்டு செல்வதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு தொடராக இதனை ஆரம்பித்திருந்தார். கடந்தகாலங்களில் இதில் பங்குபற்றியவர்கள் வெற்றிகளை நோக்கி முன்னேறி பல சாதனைகளைப் படைத்துள்ளதுடன், கோல்ஃப் விளையாட்டுக்கான ஆரம்ப அத்திவாரமாக இத்தொடர் நன்மதிப்பை சம்பாதித்துள்ளது.       

இந்த மகத்தான பயணத்தில் முதல்முறையாக அங்கம் வகிக்கும் வாய்ப்பு தற்போது இலங்கைக்குக் கிட்டியுள்ளது. இந்நிகழ்வின் முக்கிய அங்கமான Faldo ஜுனியர் சுற்றுலா, 13-16 மற்றும் 17-21 ஆகிய இரு வயதுப் பிரிவுகளின் கீழ் சிறுவர், சிறுமியர், இளைஞர், யுவதிகள் தமது திறமைகளைக் காண்பிப்பதற்கு களம் அமைக்கும். 54 துளைகளைக் கொண்ட இச்சுற்றுப்போட்டி World Amateur Golf Ranking (WAGR) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பங்குபற்றுகின்றவர்கள் சர்வதேச தரப்படுத்தல் புள்ளிகள் மற்றும் அங்கீகாரத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வியட்னாமில் இடம்பெறவுள்ள Faldo தொடர் ஆசிய மாபெரும் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வர். இதன் மூலமாக பெரும்பாலும் உலகத்தரம் வாய்ந்த மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற புகழ்மிக்க ஐரோப்பிய மாபெரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் இவ்வெற்றியாளர்களுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.      

நிகழ்விற்கு மேலும் விறுவிறுப்பைச் சேர்ப்பிக்கும் வகையில், பிரதான சுற்றுப்போட்டிக்கு முன்பதாக, 2025 ஜனவரி 5 அன்று Pro-Am போட்டி இடம்பெறவுள்ளது. DFCC Pinnacle வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமான போட்டியானது அடுத்த தலைமுறை கோல்ஃப் திறமைசாலிகளுடன் இணைந்து விளையாடுவதற்கான மறக்க முடியாத வாய்ப்பினை வழங்கி, தோழமை மற்றும் நட்புறவை வளர்த்து, அதிசிறந்த அனுபவத்தை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச Faldo ஜுனியர் கோல்ஃப் சுற்றுப்போட்டிக்கு ஆதரவளிப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்து, இளம் விளையாட்டு வீரர்களுக்கு வலுவூட்டி, மற்றும் இலங்கையின் இளம் வீரர்கள் உலகளாவில் பிரகாசிப்பதற்கான மேடையை ஏற்படுத்தித் தருவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் இந்நிகழ்வு ஒன்றியுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்நிகழ்வை இலங்கைக்குக் கொண்டு வருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதுடன், எமது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புக்களை உலகிற்கு காண்பிக்கும் அதேசமயம், இளம் திறமைசாலிகளுக்கு மதிப்புள்ள வாய்ப்புக்களையும் தோற்றுவிக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.   

றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தின் தலைவர் அம்ரித் டி சொய்சா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Faldo தொடரை இலங்கையில் நடத்துவது எமது கோல்ஃப் சமூகத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம். DFCC வங்கி வழங்கியுள்ள மனமுவந்த ஆதரவினால் இந்நிகழ்வு சாத்தியமாகியுள்ளதுடன், இது உள்நாட்டு கோல்ஃப் துறை மற்றும் அதற்கு அப்பால் தோற்றுவிக்கவுள்ள நீடித்து நிலைபெறும் பலனை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.   

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வானது, சர்வதேச கோல்ஃப் விளையாட்டு மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் முக்கியமானதொரு படியை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், விளையாட்டுக்களின் மூலமாக இளைஞர்,யுவதிகளுக்கு வலுவூட்டுவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச Faldo ஜுனியர் கோல்ஃப் சுற்றுப்போட்டி மற்றும் Pro-Am 2025 நிகழ்வு, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றுக்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கு உத்தரவாதமளிப்பதுடன், உலகத்தரம் வாய்ந்த போட்டி, சர்வதேச அனுபவம் மற்றும் அடுத்த தலைமுறை கோல்ஃப் திறமைசாலிகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு என அனைத்தையும் ஒன்றுசேர வழங்கவுள்ளது.       கூடுதல் விபரங்களுக்கு அல்லது இச்சுற்றுப்போட்டிக்கு உங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு 0774006543 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாக தயவு செய்து மகிந்த பெரேரா அவர்களை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here