ஆதனங்கள் மீதான முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, “முதலீட்டாளர் வீசா” திட்டத்தை இலங்கை மீளவும் அறிமுகப்படுத்தியுள்ளது

26

ஆதனத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு மூலோபாய நகர்வாக, “முதலீட்டாளர் வீசா” திட்டத்தை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மீளவும் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுக்குமனைகளை கொள்வனவு செய்ய விரும்புகின்ற இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை குறிப்பாக இலக்கு வைக்கும் வகையில், மீளமைக்கப்பட்ட இந்த முயற்சி, 2024 ஜுன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் 2024 மே 22 அன்று இடம்பெற்ற வெற்றிகரமான சந்திப்பொன்றைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.    

கட்டுப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற முதலீட்டாளர் வீசா திட்டமானது நாட்டின் ஆதனச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ள இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்களுக்கு சீரமைக்கப்பட்ட, திறன்மிக்க நடைமுறையொன்றுக்கு உறுதியளிக்கின்றது. இந்த முறைமை அடுத்த வாரமளவில் முழுமையாக தொழிற்பாட்டுக்கு வருவதுடன், வீசா விண்ணப்பங்கள் அனைத்தும் முற்றிலும் இணைய வழியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்து, முதலீட்டாளர்களாக மாற வாய்ப்புள்ளவர்களுக்கு இலகுபடுத்தப்பட்ட செயல்முறைக்கு இடமளிக்கின்றது.    

ஏற்கனவே இலங்கையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்கள் முதலீட்டு வீசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் திரும்பி வர வேண்டிய தேவை கிடையாது என்பது புதிய நடைமுறையின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த முக்கியமான மாற்றமானது முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து, கட்டுமானம் மற்றும் ஆதன நிர்மாணத் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படுகின்ற உந்துசக்தியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.    

வீசா கட்டுப்பாட்டாளர் இந்திக மந்திரிரட்ண, பிரதி வீசா கட்டுப்பாட்டாளர் ருவான் கன்னங்கர போன்ற முக்கிய அதிகாரிகள் மற்றும் இலங்கை அடுக்குமனை நிர்மாணிப்பாளர்கள் சங்கத்தின் (Condominium Developers Association of Sri Lanka -CDASL) பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் இடம்பெற்றிருந்ததுடன், வீசா விண்ணப்பத்திற்கான தேவைப்பாடுகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள் பின்வருவனவற்றை சமர்ப்பிக்க வேண்டும்:   

1. உள்வரும் முதலீட்டுக் கணக்கில் வெளிநாட்டு நாணயம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் வங்கியிடமிருந்து கடிதம்.  

2. நாட்டில் அடுக்குமனை நிர்மாண செயற்திட்டமொன்றிலிருந்து அடுக்குமனை ஒன்றை அல்லது பலவற்றை கொள்வனவு செய்யும் முதலீட்டு நோக்கத்தை விளக்கும் வகையில் முதலீட்டாளரிடமிருந்து விளக்க அறிக்கை.

100,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட முதலீடுகளுக்கு, விண்ணப்பதாரிகளுக்கு உடனடியாக ஐந்து-வருட கால வீசா வழங்கப்படுவதுடன், இதனை மீளவும் புதுப்பித்துக் கொள்ள முடியும். 200,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட முதலீடுகளுக்கு, மீளவும் புதுப்பிக்கப்படக்கூடிய வகையில் பத்து-வருட கால வீசா வழங்கப்படும். இந்த இரண்டுக்கும் அமைச்சின் அங்கீகார நடைமுறைகளுக்காக அதிகபட்சம் ஐந்து தினங்கள் தேவைப்படுகின்றன.

வணிக நேயம் கொண்ட சூழலை வளர்ப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பிரதிபலிப்பதுடன், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் நாட்டின் மூலோபாய நகர்வுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. விண்ணப்ப நடைமுறைகளை இலகுபடுத்தி, வீசாவுக்கான காலப்பகுதியை நீட்டிப்பதன் மூலமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு மிகவும் கவர்ச்சியான ஒரு நாடாக மாறுவதே இலங்கையின் நோக்கம்.

முதலீட்டாளர் நேய கொள்கையானது வெளிநாட்டு நேரடி முதலீட்டை கணிசமான அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சர்வதேச பொருளாதாரத்துடன் இலங்கையை ஒருங்கிணைக்கும். சர்வதேச முதலீட்டாளர்களுக்கான தனது கதவுகளை அகல திறப்பதன் மூலமாக, இலங்கை தனது பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்துவது மட்டுமல்லாது, அதன் ஆதன நிர்மாணத் துறையில் நிலைபேணத்தகு வளர்ச்சிக்கும் வழிகோலுகின்றது.  

மேற்குறிப்பிட்ட நேரடி மற்றும் வெளிப்படையான நன்மைகளை விட, உலகளவில் ஆதனத் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் உட்பாய்ச்சல்களுடன் பன்முக/சமாந்தர அனுகூலங்களையும் தோற்றுவிக்கும். ஆதனத் துறையில் முதலீடு செய்வதென்பது இயல்பாகவே நீண்ட கால மற்றும் பாரிய பொருளாதார அனுகூலத்திற்கு வழிகோலுவதுடன், நாட்டில் தொடர் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களைக் கொண்டுவருகின்றது.

தொடர்ந்து இடம்பெறுகின்ற உட்பாய்ச்சல்கள் வாழ்வாதாரம், வாகனங்கள், பங்குச்சந்தையில் முதலீடு, பொழுதுபோக்கு, அடிக்கடி இடம்பெறும் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் வருகை போன்றன ஆரம்ப முதலீட்டுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உலகளவிய உதாரணங்கள் காண்பிக்கின்றன.    

ஆதன துறை கொண்டுள்ள மகத்தான வாய்ப்புக்கள் மற்றும் மிகவும் தேவையாக காணப்படுகின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் மேம்படுத்துவதில் அவை ஆற்றக்கூடிய பங்களிப்பு ஆகியவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெளிவாக இனங்கண்டுள்ளமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாக அமைந்துள்ளதுடன், அடுக்குமனை தொழில்துறையை ஆதரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சி உண்மையில் போற்றத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களுக்கு உறுதியளித்து, தேசத்தின் வலுவாக வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் வகையில், இலங்கையின் பொருளாதார பயணத்தில் புதிய அத்தியாயமொன்றை வரவேற்பதில் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here