கலா பொல 2024 – இலங்கை ஓவியக் கலையின் மகத்தான கொண்டாட்டம்

23

இலங்கையில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற திறந்தவெளி ஓவியச் சந்தையான கலா பொல 2024, 2024 பெப்ரவரி 18 அன்று கொழும்பு 7, ஆனந்த குமாரசுவாமி வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளதுடன், ஓவியர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இரு தரப்பினருக்கும் வெற்றியை ஈட்டித்தந்து, ஒப்பந்த அடிப்படையிலான ஓவியப்படைப்புக்கள் நீங்கலாக, அண்ணளவாக ரூபா 51 மில்லியன் விற்பனையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

31வது ஆண்டை எட்டியுள்ள கலா பொல நிகழ்வானது, ஓவியர்களும், சிற்பிகளும் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து, கொள்வனவாளர்கள், துறை சார் வல்லுனர்கள், மற்றும் கலைஞர்கள் சமூகம் ஆகியோருடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள இடமளித்து வருகின்ற இலங்கையின் மிகப் பாரிய மற்றும் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கலை மேடையாகும். ஜோர்ஜ் கீற் நிதியம் (George Keyt Foundation – GKF) மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியவற்றுடனான நீண்டகால ஒத்துழைப்புடன், இந்நிகழ்வு பலத்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், 368 கலைஞர்களையும், கிட்டத்தட்ட 38,000 பார்வையாளர்களையும் (நிகழ்வு இடத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் வருகை தந்த வாகனங்கள் அடங்கலாக) ஈர்த்துள்ளது.    

இந்த உத்தியோகபூர்வ வைபவத்தின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், ஜோர்ஜ் கீற் நிதியத்தின் (GKF) தலைவர் திரு. மாலக தல்வத்த, GKF அறக்கட்டளையின் அங்கத்தவர்கள், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. கிறிஷான் பாலேந்திரா, மற்றும் இக்குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களும் இணைந்து கொண்டனர்.    

GKF இன் தலைவர் மாலக தல்வத்த அவர்கள் உத்தியோகபூர்வ வைபவத்தில் வரவேற்புரையை ஆற்றுகையில், “இன்று பெரும் எண்ணிக்கையில் மக்கள் இங்கு வருகை தந்துள்ளனர். ஓவியக்கலை என்பது அனைவருக்கும் பொதுவானது எனவும், ஒவ்வொரு ஓவியக் கலைஞரும் தமது படைப்பைக் காண்பிப்பதற்கு வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாம் உறுதியாக நம்புகின்றோம். இந்தப் பணியை கலா பொல செவ்வனே ஆற்றி வருகின்றது. இந்த மேடையானது கடந்தகாலங்களில் பிரமாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், எமது கூட்டாளரான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதரவே இதற்கான பிரதான காரணம். இன்று நாம் காண்கின்ற வகையில், இந்த அளவில் நிகழ்வை வளர்ப்பதற்கு அவர்களே காரணகர்த்தா. 1993 ஆம் ஆண்டில் 30 ஓவியக் கலைஞர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இன்று 350 க்கும் மேற்பட்டவர்கள் தமது படைப்புக்களை காண்பிக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.     

மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் உரையாற்றுகையில், “இலைமறைகாயாகவுள்ள ஓவியத்திறமைகளை சமூகத்தின் முன்னே கொண்டு வருவதால் இந்த முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓவியக்கலை வடிவங்களின் சிறப்பியல்புகள் என்ற கோணத்தில், இயல்பான மற்றும் தன்னிச்சையாக வெளிவருகின்ற படைப்புக்களை ஒருங்கிணைக்கின்ற, ஒரு தொகுக்கப்படாத, ஓவியச்சந்தை வடிவத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள். ஓவியம் என்பது பார்த்து ரசிப்பதற்கு மட்டுமானதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. இது சமூக உரையாடலுக்கான ஒரு உந்துசக்தியாகவும், மாற்றத்திற்கான தூண்டுதலாகவும், பிற்போக்கு சிந்தனைகளுக்கு சவால் விடுவதாகவும் மற்றும் புதிய சிந்தனைகளுக்கான பின்னணியாகவும் இருக்க முடியும்,” என்று குறிப்பிட்டார். கலா பொல நிகழ்வின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக, GKF மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் ஆகியன தொடர்ச்சியாக கைகோர்த்துள்ளமைக்கு அவர் தனது பாராட்டுக்களையும் வெளிப்படுத்தினார்.            

இந்த நிகழ்வு தொடர்பாகவும், கலைகள் மற்றும் கலாச்சாரத்தின் மீது ஜோன் கீல்ஸ் குழுமம் செலுத்துகின்ற கவனம் தொடர்பிலும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலீன் ஜெயசூரிய அவர்கள் கருத்து வெளியிடுகையில், “கலா பொல 2024 நிகழ்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கலைகள் மற்றும் கலாச்சாரம் என்ற தலைப்பின் கீழ் பல்வேறுபட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ள நிலையில், கலைஞர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, இலங்கையின் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவித்து, கலைநயம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதனூடாக சமூக இணக்கம் மற்றும் நலனுக்கு வழிகாட்டும் எமது முயற்சிகளில் கலா பொல என்பது தனித்துவமான மற்றும் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது. படைப்பாற்றல் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றுவதில் இத்தகைய முயற்சிகளின் சாத்தியம் குறித்து நாம் மிகுந்த ஆவலுடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

கலா பொல 2024 நிகழ்வில் தனது படைப்புக்களை காட்சிப்படுத்திய ஒரு ஓவியரான சுவர்ணா அபேதுங்க அவர்கள் கூறுகையில், “எவ்விதமான குழப்பங்களுமின்றி மிகவும் நேர்த்தியாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கலா பொல ஏற்பாட்டாளர்களுக்கு தலைவணங்குகின்றேன். எவ்விதமான பாகுபாடுமின்றி, அனைத்து ஓவியர்களுக்கும் சம வாய்ப்பினை வழங்குகின்ற இலங்கையிலுள்ள ஒரேயொரு மேடையாக இது அமைந்துள்ளது. ஒரு ஓவியராக நான் முதன்முறையாக இந்த தடவை கலா பொல நிகழ்வில் பங்குபற்றியுள்ளதுடன், இது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

சிறுவர்களுக்கான ஓவியக்கூடமொன்றும் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், Cora Abraham Art School கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களின் வழிகாட்டலில் இது நடாத்தப்பட்டது. நிகழ்வு இடம்பெற்ற தினத்தன்று 165 சிறுவர்கள் இதில் பங்குபற்றியுள்ளதுடன், மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, சிற்பங்களை செதுக்குவதற்கு சிறுவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சிச் செயலமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களுக்கான ஓவியக்கூடத்திற்கு இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களும் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் ஜோர்ஜ் கீற் நிதியம் ஆகியவற்றின் தலைவர்களும் நேரில் வருகை தந்து சிறப்பித்ததுடன், பங்குபற்றிய சிறுவர்களுக்கு புத்தகப்பைகளையும், சான்றிதழ்களையும் பரிசாக வழங்கினர்.

மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்திய இரு உரையாடல்களும் கலா பொல 2024 நிகழ்வில் அடங்கியிருந்தன. கசுன் ஜெயமான்ன அவர்களின் நெறியாள்கையில், சமகால ஓவியக்கலை தொடர்பில் கலாநிதி பிரியந்த உடகெதர அவர்களின் உரையும், நதீஜா தம்பையா அவர்களின் நெறியாள்கையில் ஓவியங்களின் சேகரிப்பை கட்டியெழுப்புவது தொடர்பான பெறுமதிமிக்க நுண்ணறிவு தொடர்பில் மாலக தல்வத்த அவர்களின் உரையும் இடம்பெற்றதுடன், இந்த இரு நிகழ்வுகளும் கலந்துகொண்டவர்களை பெரிதும் ஈர்த்திருந்தன.

களியாட்டத்தைப் போன்ற ஒரு சூழலில், நடனம், மேளதாளம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கலான இலங்கையின் நிகழ் கலை நிகழ்வுகளின் விமரிசையான பின்னணியுடன் அன்றைய மாலைப்பொழுது சிறப்புற நிறைவுற்றது.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 123 பணியாளர்கள் கலா பொல 2024 நிகழ்வில் தொண்டர்களாக இணைந்து பணிகளுக்கு உதவியிருந்தனர்.

இந்த வீதியோர சந்தை நிகழ்வினை வருடம் முழுவதும் தொடர்ந்தும் காண்பிக்கும் வகையில், இலங்கையின் காணல் கலைகளை காட்சிப்படுத்துவதற்காக ஜோன் கீல்ஸ் நிதியம் ஆரம்பித்துள்ள https://www.srilankanartgallery.com என்ற டிஜிட்டல் தளமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 பல்வேறுபட்ட தொழில் துறைகளில், 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் வர்த்தக சமூக நலன்புரி அங்கமான ஜோன் கீல்ஸ் பவுண்டேஷனின் ஆறு முக்கியமான இலக்குகளில் ஒன்றாக கலைகள் மற்றும் கலாச்சாரம் காணப்படுகின்றது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுடன், 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பளித்துள்ள ஜோன் கீல்ஸ் குழுமம், கடந்த 18 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையில் ‘மிகவும் நன்மதிப்புடைய நிறுவனமாக’ (Most Respected Entity) தரப்படுத்தப்பட்டுள்ளது. Transparency International Sri Lanka இன் ‘Transparency in Corporate Reporting Assessment’ இல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி முதல் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார மன்றத்தின் பூரண அங்கத்துவ நிறுவனமாக உள்ளதுடன், ஐநா சர்வதேச உடன்படிக்கையிலும் பங்காளராகவுள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் ஊடாக “எதிர்காலத்திற்காக தேசத்தை வலுவூட்டுதல்” (Empowering the Nation for Tomorrow) என்ற தனது வர்த்தக சமூக நலன்புரி குறிக்கோளை முன்னெடுத்து வருகின்றது. அதன் சமூக தொழில்முயற்சியாண்மை முன்னெடுப்பான ‘Plasticcycle’ என்பது இலங்கையில் பிளாஸ்திக் மாசுபாட்டை கணிசமாக குறைப்பதற்கு ஒரு உந்துசக்தியாக காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here