கொழும்பு துறைமுக நகரம் தனது முதன்மை வணிகப் பூங்காவான வணிக மையத்திற்கு அடிக்கல்லை நாட்டி, புத்தாக்கத்தின் உதயத்தில் புதிய யுகமொன்றுக்கு வித்திட்டுள்ளது. இந்த அடிக்கல்நாட்டு வைபவமானது இச்செயற்திட்டத்திற்கு மட்டுமல்லாது, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் பிராந்தியத்தின் முன்னணி மையமாக மாறவேண்டும் என்ற நாட்டின் குறிக்கோளைப் பொறுத்தவரை பாரிய சாதனை இலக்காக அமைந்துள்ளது.
புத்தாக்கம் மற்றும் முதலீட்டுக்கான வழிகாட்டி
இது வரையான காலத்தில் இலங்கையின் வரலாற்றிலேயே மிகப் பாரிய அரச-தனியார் பங்குடமை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டமாக அமைந்துள்ள கொழும்பு துறைமுக நகரம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. கடலிலிருந்து பெறப்பட்ட நிலத்தில் முற்றிலும் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட இச்செயற்திட்டமானது, பிராந்தியத்தின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத் துறைகளில் முக்கிய செயல்பாட்டாளராக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளது.
வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான வழிகாட்டி
ஒரு முன்னோடி வர்த்தகச் சூழல் கட்டமைப்பாக மாறுவதற்கு தலைப்பட்டுள்ள, கொழும்பின் தற்போதைய மத்திய வணிக மாவட்டத்திற்கு நெருக்கமான இடத்தில் அமைந்துள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் வணிக மையமானது, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான வழிகாட்டியாக அமையும் ஒரு எளிமையான கட்டடத் தொகுதியாக அமையும். 2024 மூன்றாம் காலாண்டில் குடிபுகுவதற்கு ஏற்ற வகையில் பூர்த்தி செய்யப்பட்டு, தயாராகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், உலகத்தரம் வாய்ந்த இந்த வணிகப் பூங்கா சமகாலத்து உட்கட்டமைப்பு மற்றும் ஏற்பாட்டு வசதிகளைக் கொண்டிருப்பதுடன், 120,000 சதுர அடி முன்னணி அலுவலக இடவசதி, இரு தனித்துவமான வர்த்தக கட்டடத் தொகுதிகள் – தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் வர்த்தக மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். பூந்தோட்ட சூழலுடனான அலுவலகம், நெகிழ்வுத்தன்மை கொண்ட இணைப்பணி இட வசதிகள், மற்றும் அடர்த்தி குறைவான பணிச் சூழல்கள் அடங்கலாக அதிநவீன பணி இட ஏற்பாடுகளை இந்த வணிக மையம் கொண்டிருப்பதுடன், இது வணிக மையத்தைப் பொறுத்தவரையில் நிலைபேண்தகைமை அதன் பிரதான கோட்பாடாக உள்ளமையை நிரூபிக்கின்றது.
எதிர்காலத்தில் அங்கம் வகிப்பதற்காக விடுக்கப்படுகின்ற அழைப்பு
எதிர்காலத்திற்கான வலு மையம் என்ற வகையில், கொழும்பு துறைமுக விசேட பொருளாதார வலயத்தினுள் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட நபர்கள் உத்தியோகபூர்வமாக வரவேற்கப்படுகின்றனர் என்ற செய்தியையும் இந்த அடிக்கல்நாட்டு வைபவம் எடுத்துரைக்கின்றது. அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஆக்கபூர்வமான செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பாடுகளை வளர்க்கின்ற ஒரு வலுவான மையமாக இது அமையவுள்ளதுடன், தெற்காசியாவிலிருந்து உச்ச திறமைசாலிகளையும் ஈர்க்கவுள்ளது. வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான வழிகாட்டியாக வணிக மையம் செயல்படவுள்ளதுடன், தெற்காசியாவின் மையத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இந்த வணிக மையத்தின் மூலமாக கிடைக்கும் நன்மைகளை பெற்று அனுபவிக்குமாறு முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச கூட்டுத்தாபனங்களுக்கு இச்செயற்திட்டம் அழைப்பு விடுக்கின்றது.
இந்த வணிக மையம் மிகவும் முக்கியமானதொரு இடத்தைக் குறித்து நிற்பதுடன், புத்தாக்கம், வர்த்தக வளர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவற்றுக்கான இடமாக மாறவுள்ள இலங்கையின் ஸ்தானத்தையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. எதிர்காலம் பிரகாசமானதாகவே தோன்றுகின்றது. ஆசியாவின் எதிர்காலம் சிறப்பாக தென்படுவதுடன், வணிகத்துக்கு இடமளிக்கும் சூழலுக்காக, நிலைபேணத்தகு அபிவிருத்தியை வழங்கி முதலீடுகளை உள்வாங்குவதற்கு இலங்கை தயாராக உள்ளது.
இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன (பிரதம அதிதி), இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவரான மேன்மைதங்கிய குய் ஜென்ஹாங், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம உள்ளிட்ட விசேட அதிதிகள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்துள்ளனர். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் திரு. தினேஷ் வீரக்கொடி, இச்செயற்திட்டத்தின் ஒழுக்காற்று அதிகார சபையும், முதன்மை நிர்மாணிப்பாளருமான CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளை வரவேற்று, கௌரவித்தனர். பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், மதிப்பிற்குரிய முதலீட்டாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பலரும் இந்த முக்கியமான நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.