DFCC வங்கி நிலைபேற்றியல் மற்றும் காலநிலை இசைவாக்கத்தில் முன்னோடியாக செயல்பட்டு, பசுமை நிலையான வைப்புகளை அறிமுகப்படுத்திய முதல் வங்கியாக உருவெடுத்துள்ளது

32
இடமிருந்து வலமாக காணப்படுபவர்கள்: நளின் கருணாதிலக - துணைத் தலைவர் - நிலைபேற்றியல் மற்றும் ஆலோசனை, DFCC வங்கி பிஎல்சி, குஷானி ஜயசிங்க - முகாமையாளர், கடல்கடந்த வங்கிச்சேவை மற்றும் வாணிப வர்த்தக அபிவிருத்தி, DFCC வங்கி பிஎல்சி, சன்ன தயாரத்ன - துணைத் தலைவர் - திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை - DFCC வங்கி பிஎல்சி, பிரின்ஸ் பெரேரா - சிரேஷ்ட துணைத் தலைவர் - திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை, DFCC வங்கி பிஎல்சி, அன்டன் ஆறுமுகம் - சிரேஷ்ட துணைத் தலைவர் - கடல்கடந்த வங்கிச் சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக அபிவிருத்தி, DFCC வங்கி பில்சி, திமால் பெரேரா – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி - DFCC வங்கி பில்சி, அசுசா குபோடா, இலங்கையில் UNDP க்கான வதிவிடப் பிரதிநிதி, ஜுவான் ஃபோர்ரோ - USAID வினையூக்கி தனியார் துறை மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான செயல்பாட்டு அணித் தலைவர், புவனேகபாகு பெரேரா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் செயலாளர் நாயகம், நில்மினி குணரத்ன - துணைத் தலைவர்/சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேற்றியலுக்கான தலைமை அதிகாரி, DFCC வங்கி பில்சி, இரங்க அமிலான - உதவித் துணைத் தலைவர், கடல்கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வணிக அபிவிருத்தி, DFCC வங்கி பில்சி.

இலங்கையில் நிலைபேண்தகு கடன் வழங்கலில் முன்னோடியான DFCC வங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை இசைவாக்கம் மற்றும் ஏனைய நிலைபேற்றியல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் மற்றொரு குறிப்பிடத்தக்க படியை முன்னெடுத்துள்ளது. இந்த காரணத்திற்காக அதன் சாதனைகள் மற்றும் புத்தாக்கங்களின் பட்டியலில் சேர்ப்பிக்கும் வகையில், DFCC வங்கி சமீபத்தில் அதன் பசுமை நிலையான வைப்பு என்ற முதன்முதல் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் இன்னுமொரு புரட்சிக்கு உந்துசக்தியாக, DFCC வங்கியின் பசுமை நிலையான வைப்புக்கள் குறிப்பாக சுற்றுச்சூழல்ரீதியாக நிலைபேண்தகு முயற்சிகளை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வைப்புக்கள் சுற்றுச்சூழலை சாதகமாக பாதிக்கும் மற்றும் நிலைபேற்றியலுக்கு பங்களிக்கும் செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு நிதி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய DFCC பசுமை நிலையான வைப்பு, DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் UNDP க்கான வதிவிடப் பிரதிநிதியான அசுசா குபோடா,  USAID வினையூக்கி தனியார் துறை மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான செயல்பாட்டு அணித் தலைவரான  ஜுவான் ஃபோர்ரோ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், செயலாளர் நாயகமுமான  புவனேகபாகு பெரேரா மற்றும் DFCC வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமால் பெரேரா உள்ளிட்ட மதிப்பிற்குரிய அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், DFCC வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணி மற்றும் பணியாளர்களும் நிகழ்வில் சமூகமாகியிருந்தனர்.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா, “எமது பூமியின் நிலைபேற்றியல் மற்றும் உயிர்வாழ்விற்கான அச்சுறுத்தல்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம். எனவே, சமூக மற்றும் சுற்றாடல் நலனுக்காக பலதரப்பட்ட நிலைபேற்றியல் முயற்சிகள் மூலமாக பங்களிப்பை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எரிசக்தி திறன் மற்றும் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை ஊக்குவித்தல், பச்சை வீட்டு வாயு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் பிற மாசுபாடுகளைக் குறைத்தல் மற்றும் எமது பலதரப்பட்ட நிதியியல் செயல்பாடுகள் மற்றும் உள்ளக மற்றும் வெளியக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் நாம் அவற்றை ஊக்குவித்து வருகிறோம். DFCC பசுமை நிலையான வைப்புக்களுடன், பசுமையான மற்றும் நிலைபேண்தகு எதிர்காலத்தை வளர்ப்பதில் நாம் முன்னின்று செயல்படுவதுடன், அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை வளர்த்துக் கொள்ளும் அதேசமயம், பசுமைப் புரட்சியில் இணைந்துகொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்,” என்று குறிப்பிட்டார். 

அதன் குறைந்த காபன் அடிச்சுவடு மற்றும் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க திடசங்கல்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகளை 32% ஆக அதிகரிக்கவும், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை 14.5% ஆல் குறைக்கவும் நாடு இலட்சியத்துடனான இலக்குகளை நிர்ணயித்துள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியில் 70% அளவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக அடைவதற்கான இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்கு திட்டம், 2024 இல் இலங்கையில் காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவது என்பது காலநிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் தேசத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, DFCC பசுமை நிலையான வைப்பின் அறிமுகம், இன்னும் கூடுதலான நிலைபேண்தகு எதிர்காலத்தை நோக்கிய தேசிய முயற்சியுடன் ஒத்திசைகின்றது. 

DFCC வங்கி நீண்ட காலமாக இலங்கையில் நிலைபேற்றியல் முயற்சிகளில் முன்னணியில் உள்ளதுடன், 2020 ஆம் ஆண்டில் முறையான நிலைபேற்றியல் மூலோபாயத்தை அறிமுகப்படுத்திய முதல் வங்கியாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு முதல், வங்கி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயல்திட்டங்களுக்கு கடனுதவி அளித்து, நாடு முழுவதும் நிலைபேண்தகு மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊக்கியாகப் பங்காற்றி வந்துள்ளது. சூரிய PV தொகுப்பு ஆலைகள் முதல், நீர், காற்று, சூரிய சக்தி, உயிர்வாயு மற்றும் கழிவிலிருந்து எரிசக்தி மின் உற்பத்தி திட்டங்கள் வரை, DFCC வங்கி எப்போதும் ஒரு முன்னோடி வகிபாகத்தை ஆற்றி வருவதுடன், பலதரப்பட்ட நிலைபேண்தகு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) சான்று அங்கீகாரம் பெற்ற முதல் இலங்கை நிறுவனமாக DFCC வங்கியின் நிலைபேற்றியலுக்கான அர்ப்பணிப்பு சமீபத்தில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் DFCC வங்கிக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வரையிலான செயல்திட்டங்களுக்கு GCF சலுகை கடனை அணுகுவதற்கு வலுவூட்டுகிறது. இது இலங்கை முழுவதும் காலநிலை தணிப்பு மற்றும் இசைவாக்க செயல்திட்டங்களுக்கு கடன் வசதியளிக்க இடமளிக்கிறது. இவ்வாறாக, DFCC பசுமை நிலையான வைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், அனைத்து இலங்கையர்களும் ஏங்கும் பசுமையான எதிர்காலத்தை நனவாக்கும் நோக்கில் வங்கி மற்றுமொரு முன்னோடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here