SLIIT மற்றும் Deakin பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து புதுமைமிகுந்த அவுஸ்திரேலியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) பட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றன

10

2025 ஜனவரி 23 :  இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) மற்றும் அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகம் ஆகியன தமக்கிடையில் ஏற்படுத்தியுள்ள இரு தசாப்தத்திற்கு மேலான கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தும் வகையில் இலங்கையின் முதலாவது அவுஸ்திரேலிய செயற்கை நுண்ணறிவு (AI) இளமானிப் பட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன. இந்த முன்னணி முயற்சியினால் Deakin பல்கலைக்கழகத்தின் முதலாவது அவுஸ்திரேலிய செயற்கை நுண்ணறிவு பட்டத்தை இலங்கையில் பூர்த்திசெய்வதற்கு மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பானது இந்நாட்டின் உயர் கல்வி வரலாற்றில் திருப்பகட்ட நிகழ்வாக அமைகின்றது. 

புதுமை நிறைந்த இந்தப் பட்டம் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கான தளத்தை ஏற்படுத்தும் வகையில் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. SLIIT  இன் நிபுணத்துவம், மற்றும் Deakin பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர்கள் என்ற ஆற்றல் மிக்க பிணைப்பின் மூலம் Deakin பல்கலைக்கழகத்தின் உலகத் தரம் மிக்க மூன்று வருடங்களைக் கொண்ட விரிவான இந்தப் பட்டப் பாடநெறியானது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக மாணவர்கள் குறித்த பட்டத்தை இலங்கையில் கற்கும் அதேநேரம், உண்மையான உலகளாவிய கற்றல் அனுபவம் கிடைப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய போல் ஸ்டீஃபன்ஸ் தெரிவிக்கையில், “எமது நிறுவனங்களுடன் 30 வருடங்களுக்கு மேலாகப் பேணப்பட்டுவரும் இருதரப்பு கூட்டாண்மைகள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி தொடர்பான கூட்டாண்மை மென்மேலும் பலமடைந்து வருகின்றது. இதன் விளைவாக அவுஸ்திரேலியாவில் தற்சமயம் 18,000ற்கும் அதிகமான இலங்கையர்கள் கல்வி கற்கின்றனர். Deakin பல்கலைக்கழகம் மற்றும் SLIIT நிறுவனம் ஆகியன தமக்கிடையிலான இரண்டு தசாப்தத்திற்கு மேலான கூட்டாண்மையின் ஊடாக தரமான அவுஸ்திரேலியக் கல்வியை இலங்கையில் வழங்கி வருகின்றன. வளர்ச்சியடைந்துவரும், மூலோபாய முக்கியத்துவம் மிக்க துறையான செயற்கை நுண்ணறிவில் Deakin இன் முதலாவது பட்டக் கல்வியை இலங்கையில் பூர்த்திசெய்யக் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தினால் Deakin பல்கலைக்கழகத்திற்கும் SLIIT நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றுமொரு படிக்கு முன்னேறிச் செல்கின்றது” என்றார்.

Deakin பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல் பீடத்தின் சர்வதேச மற்றும் கூட்டாண்மைகளின் இணை பீடாதிபதியும், சர்வதே ஆய்வுக் கூட்டாண்மைகளின் பிரதி உபவேந்தருமான பேராசிரியர் பாஸ் பாஸ்கரன் குறிப்பிடுகையில், “இலங்கையில் வழங்கப்படும் அவுஸ்திரேலியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பட்டமான Deakin பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு இளமானி பட்டத்தின் மூலம் எதிர்காலத்திற்கான வாய்ப்புத் திறக்கப்படுகின்றது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவில் இலங்கையின் அடுத்த தலைமுறை தலைவர்கள் இணைந்து இன்றைய மற்றும் நாளைய எதிர்காலத்தை வளப்படுத்த முடியும்” என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய போல் ஸ்டீஃபன்ஸ், Deakin பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் பாஸ் பாஸ்கரன், SLIIT நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேந்தரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி உபவேந்தரும் உயர் நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ ஆகியோர் குழுக் கலந்துரையாடலின் உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்தப் பட்டமானது மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, தகவல் விஞ்ஞானம், இயந்திரக் கற்கை மற்றும் ரொபோட்டிக்ஸ் போன்ற துறைகளில் ஆழமான அறிவையும், நடைமுறையான நிபுணத்துவத்தையும் வழங்கும். குறிப்பாக, சர்வதேச கல்வித் தரங்கள் அடையப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திற்கு அமைய இந்தப் பட்டக் கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறையை நோக்காகக் கொண்ட திட்டங்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் மாணவர்களுக்குக் கிடைப்பதுடன், தொழில்துறையின் வேலைவாய்ப்புக்களுக்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கான பெறுமதிமிக்க அனுபவத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இந்த அணுகுமுறையானது அவர்களின் கற்றலை மேம்படுத்துவதோடு, வேகமாக வளர்ச்சியுற்றுவரும் இத்துறையின் எதிர்கால வேலைவாய்ப்புக்களுக்குத் தேவையான திறன்களையும் வழங்கும்.

Deakin பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல் பீடத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மென்பொருள் பொறியியல் பேராசிரியரும், சர்வதேச மற்றும் நிலைமாறு கல்விப் பிரிவின் இணை தலைவருமான பேராசிரியர் ரூபக் சிங்ஹா கருத்துத் தெரிவிக்கையில், “SLIIT மற்றும் Deakin பல்கலைக்கழத்திற்கு இடையிலான உலகளாவிய கூட்டாண்மையின் ஊடாக இந்த செயற்கை நுண்ணறிவு இளமானிப் பட்டத்தை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம் தெற்காசியாவில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடிவதுடன், உலகத் தரம்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர்களையும் உருவாக்க முடியும்” என்றார்.

Deakin பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் நேரடியான விரிவுரை அமர்வுகளில் பங்கெடுப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதுடன், எந்த நேரத்திலும் தமது கல்வியை அவுஸ்திரேலியாவிற்கு மாற்றி, குறித்த பாடத்தை அங்கு பூர்த்திசெய்வதற்கான நெகிழ்வுப்போக்கு போன்ற நன்மைகளும் உண்டு. இதற்கு மேலதிகமாக சிறந்த அடைவைப் பெறும் மாணவர்களுக்கு கல்விக்கான கட்டணத்தில் 25 விகிதத்தை உள்ளடக்கக் கூடிய வகையில் தகுதி அடிப்படையிலான புலமைப்பரிசிலைப் பெறுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதுடன், இதன் மூலம் உலகம்தரம் வாய்ந்த கல்விக்கான அணுகல் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. 

SLIIT  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே குறிப்பிடுகையில், “அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்துடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்படுத்திய வெற்றிகரமான கூட்டாண்மையின் மூலம் இலங்கையின் முதலாவது அவுஸ்திரேலிய செயற்கை கூண்ணறிவு இளமானிப் பட்டத்தை SLIIT இல் வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். Deakin பல்கலைக்கழகத்திற்கு காணப்படும் பலமான உலகளாவிய நற்பெயர் மற்றும் இலங்கையின் முன்னணி உயர் கல்வி வழங்குனர் என்ற SLIIT  இன் ஸ்தானம் என்பன, இந்தத் திட்டம் மாணவர்களுக்கு உயர்தர கற்றல் அனுபவத்தையும் செயற்கை நுண்ணறிவில் மதிப்புமிக்க திறன்களையும் வழங்கும் என்பதை உறுதி செய்கின்றன. இந்தக் கூட்டாண்மை எமது மாணவர்களுக்குப் புதிய பாதைகளைத் திறப்பதுடன், இலங்கையின் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் வளர்ச்சியை மேம்படுத்தி எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்க உதவுகின்றது. இந்த வெற்றியை அடைவதில் நாம் பெருமை கொள்வதுடன், எமது மாணவர்கள் மற்றும் தேசத்தின் மீது தாக்கம் செலுத்துவதற்கு நாம் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளவும். மின்னஞ்சல்: [email protected], தொலைபேசி : +94 77 622 8989 | +94 11 754 3121இ இணையத்தளம் : www.sliit.lk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here