டிசம்பர் 2024, கொழும்பு: இலங்கையில் கண்ணாடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரேயொரு நிறுவனமும், உலகளவில் முன்னிலை வகித்து வருகின்ற PGP Glass Ceylon PLC (PGC), தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் (National Chamber of Exporters – NCE) மற்றும் இலங்கை பொதியிடல் விருதுகள் (Sri Lanka Packaging Awards) நிகழ்வுகளில் மதிப்பிற்குரிய இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது. கண்ணாடி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக PGP Glass திகழ்வதையும், உலகத்தரம் வாய்ந்த கண்ணாடி உற்பத்தியின் மையமாக இலங்கையின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதையும் இச்சாதனைகள் வெளிக்காண்பித்துள்ளன.
ஏற்றுமதி அளவுகளின் அடிப்படையில் இலங்கையின் உச்ச ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக, தேசத்தின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதில் PGP Glass முக்கிய பங்கு வகித்து வருகின்றது. NCE தங்க விருதானது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு இந்நிறுவனம் ஆற்றி வருகின்ற மகத்தான பங்களிப்பை சுட்டிக்காட்டுவதுடன், அதன் உயர் ரக கண்ணாடி கொள்கலன்கள் 20 க்கும் மேற்பட்ட நாடுகளை எட்டி வருகின்றன.
60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிபுணத்துவத்தைக் கொண்ட PGP Glass Ceylon, ஹொறணை, வஹாவத்தையில் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை இயக்கி வருவதுடன், தினசரி 300 தொன் கண்ணாடிகளை உற்பத்தி செய்து வருகின்றது. வர்ண கண்ணாடிப் போத்தல்களை உற்பத்தி செய்வதில் தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது உற்பத்தியாளர் என்ற வகையில், 15 க்கும் மேற்பட்ட வர்ணக் கண்ணாடித் தெரிவுகளைக் கொண்ட ஒப்பற்ற உற்பத்தி வரிசையுடன், மதுபானம், உணவு மற்றும் பான வகை உள்ளிட்ட பல்வகைப்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு அவற்றை வழங்கி வருகின்றது. இலங்கை பொதியிடல் விருதுகள் நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ளமை, புத்தாக்கமான மற்றும் நிலைபேணத்தக்க பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது.
பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொது நிறுவனம் என்ற வகையில், சூரிய எரிசக்தி முயற்சிகள், மீள்சுழற்சித் திட்டங்கள் மற்றும் நீரைச் சேமிக்கும் வழிமுறைகளுடன் நிலைபேணத்தக்க உற்பத்தியில் PGP Glass முன்னிலை வகித்து வருகின்றது. FSSC 22000, FDA இணக்கப்பாடு, மற்றும் ISO 9001:2015 போன்ற சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்படுகின்ற சான்று அங்கீகாரங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தரம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான பொறுப்புணர்வு ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களை உறுதி செய்கின்றது.
“இந்த விருதுகள் மகத்துவத்தின் மீதான எமது அர்ப்பணிப்பையும், இலங்கையின் ஆற்றல்களை உலக அரங்கில் வெளிக்காண்பிப்பதில் நாம் முக்கிய பங்கு வகிப்பதையும் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளன,” என்று PGP Glass Ceylon PLC ன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம தொழிற்பாட்டு அதிகாரியுமான திரு. சஞ்சய் ஜெய்ன் அவர்கள் குறிப்பிட்டார். “தேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கு பங்களிப்பதையிட்டு நாம் பெருமைப்படுகின்றோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
PGP Glass Ceylon PLC ஈட்டியுள்ள இரட்டை தங்க விருது வெற்றிகள், அதன் மூலோபாய குறிக்கோளுக்கு சான்றாக அமைந்துள்ளது மாத்திரமன்றி, இலங்கையும் பெருமைப்பட வேண்டிய ஒரு தருணமாகக் காணப்படுகின்றது. தனது அடைவுமட்டத்தை தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், கண்ணாடி உற்பத்தித் துறையில் புத்தாக்கம், நிலைபேற்றியல் மற்றும் மகத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதில் அது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.