Lanka Milk Foods (CWE) PLC (LMF) நிறுவனம், தனது Ambewela Farms இல் தனியாக 62,000 லீட்டர் பாலை தினசரி உற்பத்தி செய்து சாதனை படைத்து, அதிவிசேடமான தரஒப்பீட்டு நியமமொன்றை நிலைநாட்டியுள்ளது. தினசரி 3,000 லீட்டர் என்ற மட்டத்திலிருந்து தற்போது தினசரி 60,000 லீட்டர் பால் உற்பத்தி என்ற அசுர வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளது. 2001ம் ஆண்டில் அரசிடமிருந்து இந்த தொழிற்சாலையை நிறுவனம் பொறுப்பேற்ற சமயத்தில் தினசரி உற்பத்தியின் அளவு 3,000 லீட்டருக்கும் குறைவாகவே காணப்பட்டது. தற்சமயம் இலங்கையின் தேசிய விநியோகத்திற்கு ஆண்டுதோறும் 20 மில்லியன் லீட்டர் பாலை பங்களித்து வருகின்ற Ambewela Farms, நவீனமயமாக்கம், நிபுணத்துவம், மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் மாற்றத்திற்கான சக்திக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கவனமான திட்டமிடல், கணிசமான முதலீடுகள் மற்றும் புத்தாக்கமான பாற்பண்ணை நடைமுறைகளை அமுலாக்கம் செய்தல் ஆகியவற்றின் பலனாக இச்சாதனை அடையப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலில், ரூபா 5 பில்லியன் தொகை முதலீட்டின் அங்கமாக, 2019ம் ஆண்டில் இரண்டு தன்னியக்கமயமாக்கப்பட்ட பசுத் தொழுவம் மற்றும் பால் கறக்கும் கட்டமைப்புடன் முக்கியமான சாதனை மைல்கல்லொன்று எட்டப்பட்டது. இந்த கட்டமைப்புக்கள் இரு ஆண்டுகளுக்குள் பாலுற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளதுடன், பண்ணையை உலகத்தரம் வாய்ந்ததாகவும் மாற்றின. கறவைப்பசுக்களுக்கான சௌகரியம் முதல் கணனிமயப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கட்டமைப்புக்கள் வரை அனைத்தும் துல்லியமாக திட்டமிட்டப்பட்டு, மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கச் செய்துள்ளது.
இப்பண்ணையின் வெற்றியானது அதன் கட்டமைப்பு மூலமாக மாத்திரம் அடையப்பெற்ற ஒன்றல்ல, முன்னோக்கு சிந்தனை நடைமுறைகளும் இதற்கு காரணம். சர்வதேசரீதியாக புகழ்பெற்ற வீரியமான காளை இனங்களிலிருந்து பெறப்பட்ட பாலின விந்துக்களை உபயோகித்து இனப்பெருக்கம் செய்யும் நவீன திட்டமானது, கூடிய அளவில் பால் தருகின்ற கறவைப் பசுக்களை உள்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதற்கு இடமளித்துள்ளது. மரபணு ரீதியாக மிகச் சிறந்த இந்த கறவைப்பசுக்கள், உலகெங்கிலும் வணிகரீதியான வளர்க்கப்படுகின்ற சிறந்த கறவைப்பசு இனங்களுக்கு ஈடானவையாகக் காணப்படுவதுடன், 305 நாள் பால் சுரப்புச் சக்கரத்தின் போது 12,000 லீட்டர் என்ற பாரிய அளவிலான பாலைத் தருகின்றன. மேலும், கடுமையான ஆரோக்கியம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் இக்கறவைப் பசுக்கள் ஆரோக்கியமாகவும், வியாதிகள் அற்றவையாகவும், பால் உற்பத்தித்திறனை பேணுகின்றவையாகவும் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றன.
கூடிய அளவில் பாலைத் தரும் இக்கறவைப்பசுக்களின் உற்பத்தித் திறனை தொடர்ந்து பேணுவதற்கு முறையான ஊட்டச்சத்தை வழங்குவதும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சர்வதேச கால்நடை ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டலுடன், அதிக பால் தரும் கறவைப்பசுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், துல்லியமான தீனி வழங்கல் கட்டமைப்பை இப்பண்ணை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதை விட, குறித்த தேவைக்காக வளர்க்கப்படும் புல் வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு, பண்ணையின் பசுமையான மேய்ச்சல் தரைகளில் வளர்க்கப்படுவதுடன், அதிகபட்ச ஊட்டச்சத்தை பசுக்களுக்கு வழங்குகின்றன. கன்றுகளுக்கான நவீன பாலூட்டல் மற்றும் பராமரிப்பு முறைமைகள் அவை சிறப்பாக வளர்ந்து, விரைவிலேயே முதிர்வடைந்து, பசுக்களின் உற்பத்தியில் தொடர்ச்சியான மேம்பாடுகள் அடையப்படுகின்றன. இதன் பலனாக, Ambewela Farms இலுள்ள கறவைப்பசுக்கள் ஒவ்வொன்றும் தினசரி சராசரியாக 40 லீட்டர் பால் வரை உற்பத்தி செய்கின்றன.
Ambewela Farms பொது முகாமையாளர் சரத் பண்டார அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச நிபுணத்துவத்தை எமது உள்நாட்டு அணிகளின் அறிவு மற்றும் அர்ப்பணிப்புடன் இணைக்கின்ற ஒரு கூட்டு அணுகுமுறையுடன், இந்த சாதனை மைல்கல் சாத்தியமாகியுள்ளது. நீண்ட கால கடினமான உழைப்பு, மூலோபாயத் திட்டமிடல், மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அறுவடையாகவே இது அமைந்துள்ளது. சர்வதேச அறிவை, உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன் இணைத்து, இலங்கையில் பாலுற்பத்தியில் புதிய தராதரமொன்றை நாம் நிலைநாட்டியுள்ளோம். பாலுற்பத்தித் துறையை மேம்படுத்தி, மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் தர மகத்துவம் ஆகியவற்றினூடாக நாடு தன்னிறைவை அடைந்துகொள்ள ஆதரவளிப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Ambewela Farms மேம்பாடுகளின் பலனானது அதன் சொந்த தொழிற்பாடுகளுக்கும் அப்பால் வியாபித்துள்ளதுடன், தான் ஈட்டியுள்ள வெற்றியை உள்நாட்டிலுள்ள பாற்பண்ணையாளர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் LMF, தனது பசுக்கள் ஈணுகின்ற உயர் தர கன்றுகளை அவர்களுக்கு வழங்கி, அவர்களுடைய உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளைக் கைக்கொள்ளவும் வலுவூட்டுகின்றது. ஒன்றுபட்ட தேசமாக வெற்றியடைய வேண்டும் என்ற LMF இன் வலுவான நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த முயற்சிகள், நாட்டின் பாலுற்பத்தித் துறையை வலுப்படுத்தி, தொடர்ச்சியான மேம்பாடு கொண்ட கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கின்றன.
இது இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் வினைதிறன் மற்றும் தன்னிறைவை மேம்படுத்துவதுடன், நாட்டில் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தி, நவீன தொழில்நுட்பம், நிபுணர்கள் வழிகாட்டல், மற்றும் நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் ஆகியவற்றை இணைப்பதால் கிடைக்கப்பெறும் வளர்ச்சி வாய்ப்புக்களையும் காண்பிக்கின்றது. LMF தொடர்ந்தும் புதிய தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி வரும் நிலையில், இலங்கையின் பாலுற்பத்தித் துறைக்கு ஆதரவளித்து, நுகர்வோருக்கு ஒப்பற்ற தரத்தை வழங்கி, மற்றும் பாலுற்பத்தியில் தேசிய முன்னோடி என்ற தனது ஸ்தானத்தைப் பேணிப் பாதுகாப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது.