கொழும்பு தேயிலை வணிகர்கள் சங்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது 130வது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்தியுள்ளது

9

இலங்கையின் தேயிலை வர்த்தகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற உச்ச, தனியார் முறை அமைப்பான கொழும்பு தேயிலை வணிகர்கள் சங்கம் (Colombo Tea Traders’ Association – CTTA), 2024 ஒக்டோபர் 25 அன்று ஷங்கிரி-லா ஹோட்டலில் தனது 130வது வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்தியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட புகழ்பூத்த அங்கத்தவர்கள், தொழிற்துறை அனுபவசாலிகள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினர் கலந்துகொண்டு, CTTA இன் இடையறாத பாரம்பரியம் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கைத் தேயிலையின் மகிமையை நிலைநாட்டுவதில் அதன் முக்கியமான வகிபாகம் ஆகியவற்றைப் போற்றிக் கொண்டாடியுள்ளனர்.      

1894 ஆகஸ்ட் 9 அன்று ஸ்தாபிக்கப்பட்ட CTTA ஆனது, சர்வதேச அளவில் மிகப் பாரிய தனிப் பிராந்திய தேயிலை ஏல நிகழ்வாகத் திகழும், உலகப் பிரசித்தி பெற்ற கொழும்பு தேயிலை ஏல நிகழ்வை மேற்பார்வை செய்து தேயிலைத் தொழிற்துறையின் வளர்ச்சியை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளது. “தேயிலை விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களின் பொது நலன்களை ஊக்குவிக்கும் அதேசமயம், கொழும்பு தேயிலைச் சந்தையின் நற்பெயரைக் கட்டிக்காத்தல்” என்ற தனது ஸ்தாபக அர்ப்பணிப்பை 130 ஆண்டுகளுக்கும் மேலாக CTTA பேணிப் பாதுகாத்து வந்துள்ளது. CTTA இன் நீண்ட பாரம்பரியத்தின் மகத்துவத்தை பிரதிபலித்த CTTA தவிசாளர் திரு. சஞ்சய ஹேரத் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வரலாற்று முக்கியத்துவம் இந்த ஆண்டு நிறைவானது இலங்கைத் தேயிலையின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, எதிர்காலத்திற்காக புத்தாக்கத்தை முன்னெடுப்பதில் நாம் கொண்டுள்ள பொறுப்பினை எமக்கு நினைவுபடுத்துகின்றது. எமது தேயிலைத் தொழிற்துறை நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, அரச-தனியார் கூட்டாண்மைகளை வளர்த்து, நெகிழ்திறன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதற்கு சிறுதோட்டக்காரர்களுக்கு உதவ வேண்டியது கட்டாயம்,” என்று குறிப்பிட்டார்.           

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆண்டைக் கௌரவப்படுத்தும் வகையில், பாரம்பரிய சிறப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மீதான தனது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியவாறு, நற்பயன்மிக்க தொடர் முயற்சிகள் பலவற்றை CTTA ஏற்பாடு செய்துள்ளது. தேயிலை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான வசதி வாய்ப்பினை மேம்படுத்துவதற்காக, மஸ்கெலியா மற்றும் நிவித்திகலை ஆகிய இடங்களில் இரண்டு 1990 சுவசரிய அம்பியுலன்ஸ் வண்டிகளை கடந்த பெப்ரவரி மாதத்தில் ஏற்பாடு செய்து, தனது அடைவுமட்டத்தை இச்சங்கம் விரிவுபடுத்தியிருந்தது. இதை விட, ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட “Ray of Hope” தொண்டு முயற்சியானது தேயிலைத் துறையில் நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதில் CTTA காண்பிக்கும் அர்ப்பணிப்பை மேலும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. 2024 ஜுலையில் கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டை மீளவும் ஒழுங்குபடுத்திய இச்சங்கம், இலங்கை தேயிலையின் பாரம்பரியம், நிலைபேறாண்மை சார்ந்த முயற்சிகள் மற்றும் சர்வதேச வகிபாகம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக 800 க்கும் மேற்பட்டவர்களை வரவேற்றிருந்தது.         

CTTA இன் 130வது வருடாந்த பொதுக் கூட்டமானது தொழிற்துறை தற்போது முகங்கொடுத்து வருகின்ற சவால்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் இலங்கை தேயிலையின் ஸ்தானத்தைப் பாதுகாப்பது குறித்த எதிர்கால மூலோபாயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தொழில்நுட்பத்தின் துணையுடன் நிலைபேணத்தக்க நடைமுறைகளைக் கைக்கொண்டு, உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை திரு. சஞ்சய் ஹேரத் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், உற்பத்திச் செலவில் 60% க்கு மேலாக தொழிலாளர்களுக்கான செலவுகள் காணப்படுகின்றமை, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார். இத்துறையின் நெகிழ்தன்மையை உறுதி செய்வதற்கு தன்னியக்கமயமாக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தேவையை அவர் வலியுறுத்தினார். “புத்தாக்கம், தொழில்நுட்பத்தை கைக்கொள்ளல் மற்றும் நிலைபேணத்தக்க வளர்ச்சி ஆகியவற்றின் மீதான முன்னெதிர்வுடனான அணுகுமுறையிலேயே எமது தொழிற்துறையின் வெற்றி தங்கியுள்ளது,” என்று திரு. ஹேரத் அவர்கள் குறிப்பிட்டார்.   

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்து பிரதான உரையை ஆற்றிய, இலங்கை தேயிலை சபையின் முன்னாள் தவிசாளரும், இயற்கை பல்லுயிரின விஞ்ஞானியும்/Linnean பதக்கத்தின் வெற்றியாளருமான கலாநிதி றொஹான் பெத்தியாகொட அவர்கள் நவீன தேவைகளை ஈடு செய்வதற்கு பாரம்பரியம் மாத்திரம் போதாது என்பதை வலியுறுத்தினார். “தொழிற்துறை தனது தலைவிதியை தீர்மானிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. எமது விருப்பத்தை சிந்தனை செய்வது மாத்திரம் எமக்கு உதவப்போவதில்லை. நேரடி சவால்களை இனங்கண்டு, புத்தாக்கம் மற்றும் நிலைபேற்றியல் மீதான முன்னெதிர்வு அணுகுமுறையைக் கைக்கொள்வதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார். காலநிலை மாற்றம், அதிகப்படியான ஒழுங்குமுறை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தீர்வு காணுதல் மற்றும் தர நடைமுறைகளின் தேவை ஆகியவற்றை CTTA அங்கத்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியதுடன், இலங்கை தேயிலையை உலகிற்கு ஏற்ற வகையில் பேணுவதற்கு நவீனத்துவமான அணுகுமுறை தேவை என்பதையும் அவர் எதிரொலித்தார்.         

ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கியமான சந்தைகளில் இலங்கை தேயிலைக்கு Geographical Indication (GI) அந்தஸ்தை உறுதி செய்வதில் CTTA இன் அர்ப்பணிப்பும் இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இலங்கைத் தேயிலையின் தனித்துவமான பிராந்திய பண்புகளை சுட்டிக்காட்டிய கலாநிதி பெத்தியாகொட அவர்கள், இலங்கை தேயிலை வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு GI இன் கீழ் மேற்குறிப்பிட்ட தனித்துவமான பண்புகளை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டி, குறிப்பிட்ட விடயங்கள் குறித்து அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.         

2020ஆம் ஆண்டில் கொழும்பு தேயிலை ஏலத்தை டிஜிட்டல் முறைமைக்கு மாற்றியமைத்தமை CTTA இன் சமீபத்தைய சாதனைகளில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், இச்சங்கம் தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றது என்பதற்கு சிறப்பாக சான்று பகருகின்றது. ஒன்லைன் வழியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்தியமையானது கொவிட்-19 தொற்றுநோயின் சவால்களால் ஏற்பட்ட விளைவு என்பதுடன், இலங்கை தேயிலையின் நெகிழ்திறன் மற்றும் அணுகல்தன்மையில் புதிய யுகத்தைக் குறித்து நிற்பதுடன், நிச்சயமற்ற காலகட்டங்களிலும் வர்த்தகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்தது.    

CTTA இன் 130வது வருடாந்த பொதுக் கூட்டமானது அதன் தலைசிறந்த பயணத்தைக் கொண்டாடுவதற்கான மிகச் சிறந்த தருணமாக அமைந்துள்ளதுடன், கடந்த கால சாதனைகளை பிரதிபலித்தது மாத்திரமன்றி, எதிர்காலத்தின் வளர்ச்சிவாய்ப்புக்களையும் காண்பித்தது. CTTA அடுத்த அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், நிலைபேற்றியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், பரிமாண வளர்ச்சி கண்டு வருகின்ற சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் மகத்துவத்தை தொடர்ந்தும் மேம்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here