ஹட்ச் நிறுவனம், இலங்கையில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. தனது அர்ப்பணிப்புக்கு அமைவாக, தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக, மினுவாங்கொடையிலுள்ள ஆரங்காவ ஸ்ரீ தம்மாராம ஆரம்ப பாடசாலைக்கு டெஸ்க்டொப் கணனிகளை அது வழங்கியுள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டியதாக, காலத்திற்கு ஏற்ற இந்த முயற்சி, தொழில்நுட்பத்தினூடாக கல்விக்கு ஆதரவளிப்பதில், குறிப்பாக கிராமப்புற மற்றும் வசதிகள் குறைந்த சமூகங்கள் மத்தியில் ஆதரவளிப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. நவீன கல்வியின் அத்திவாரமாக வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற, அத்தியாவசிய டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகலை மாணவர்களுக்கு வழங்கி, நகர மற்றும் கிராம கற்றல் சூழ்நிலைகளுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப உதவுவதே இப்பங்களிப்பின் நோக்கம். ஹட்ச் தற்போது முன்னெடுத்து வருகின்ற செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளதுடன், நாடெங்கிலும் டிஜிட்டல் அறிவை வளர்க்க உதவி, இத்தகைய தேவைகளைக் கொண்ட ஏனைய உள்நாட்டு பாடசாலைகளையும் உள்ளடக்கும் வண்ணம் இது தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் விசேட வைபவமொன்று அப்பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஹட்ச் நிறுவனத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிரதான வலையமைப்பின் பொது முகாமையாளர் இந்திக எதிரிசிங்க, வாடிக்கையாளர் சேவைத் துறையின் தலைமை அதிகாரி மரீனா இம்மானுவேல் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர். இச்செயற்திட்டமானது ஹட்ச் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எந்தளவு தூரம் முக்கியமானது என்பதை அவர்களது பங்குபற்றல் காண்பித்துள்ளதுடன், நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளினூடாக நேர்மறை மாற்றத்தை முன்னெடுப்பதில் நிறுவனத்தின் தலைமைத்துவ அணியின் தீவிரமான உழைப்பினையும் மீள வலியுறுத்துகின்றது.
இந்த பங்களிப்பினூடாக, இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்குப் பங்களித்து, இணைக்கப்பட்ட உலகில் வெற்றி காண்பதற்குத் தேவையான கருவிகளை வழங்குவதன் மூலமாக எதிர்காலத் தலைமுறைகளின் மேம்பாட்டுக்கு உதவுவது நிறுவனத்திற்கு கௌரவமளிக்கின்றது.
நன்கு தேர்ந்த கல்வியின் முக்கியமான கூறாக டிஜிட்டல் அறிவு மாறியுள்ள நிலையில், மாணவர்கள் தமது எதிர்காலத்திற்கு தம்மை தயார்படுத்திக்கொள்ளும் வழிகளில், தொழில்நுட்பத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு இம்முயற்சி அவர்களுக்கு வலுவூட்டும். தொழில்நுட்பத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றியமைத்து, கல்விக்கும் உதவி, அறிவு வீதத்தை மேம்படுத்தும் தனது நீண்ட கால நோக்கத்தின் அங்கமாக, இத்தகைய முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஹட்ச் தொடர்ந்தும் முன்னுரிமையளிக்கும்.