மிகவும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்த SPARK திறன்மிக்க இளம்
தொழில்முயற்சியாளருக்கான 2024ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி செப்டெம்பர் 05ஆம்
திகதி கொண்டாடப்பட்டது. இலங்கையின் அடுத்த தலைமுறை தொழில்முயற்சியாளர்களை
வலுப்படுத்தும் இந்தத் தேசியத் தளமானது ‘பாடசாலை’ மற்றும் ‘திறந்த’ ஆகிய இரு பிரிவுகளின்
கீழ் தமது புதுமையான வணிக யோசனைகளை முன்வைத்த ஐந்து இறுதிச் சுற்றுப்
போட்டியாளர்களை வலுப்படுத்தியது. இந்த வருடத்துக்கான வெற்றியாளர்களுக்கு மகுடம்
சூட்டுவதுடன் இந்த நிகழ்வு உச்சத்தை எட்டியது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்தின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் தெற்காசிய
தொழில்முனைவோர் தலைமைத்துவம் (SALE) என்ற செயற்திட்டத்தின் கீழ் இலங்கை வர்த்தக
சம்மேளனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இந்த SPARK
திறன்மிக்க இளம் தொழில்முயற்சியாளருக்கான வருடாந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.
‘தும் மாலு பைட்’ என்ற தனது நம்பிக்கையான முயற்சியை முன்வைத்த சிறிபுர மத்திய
கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.லசிந்து புத்திக பாடசாலைப் பிரிவில் உயர்வான இடத்தைப்
பெற்றுக்கொண்டார். திறந்த பிரிவில் கலாநிதி. மேரங்கனகே ரொமேல மேரிஸ் சல்காது
அவர்களால் முன்வைக்கப்பட் ‘Pet Labs’என்ற ஆரம்ப வர்த்தகத் திட்டம் வெற்றிபெற்றது. இரு
வெற்றியாளர்களும் அவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் தொழில்முனைவு
யோசனைகளுக்காகவும் கொண்டாடப்பட்டதுடன், இந்தக் கொண்டாட்டமானது இந்த வருடப்
போட்டியின் வெற்றியைக் குறிக்கின்றது.
இந்தப் போட்டியின் முதலாவது சுற்றில் மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ்
விண்ணப்பித்த போட்டியாளர்களில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு
செய்யப்பட்டவர்கள் பயிற்சி, வதிவிட ஆரம்ப பயிற்சி முகாம், நேரடியான வழிகாட்டல்கள் மற்றும்
வணிகங்களை முன்வைப்பது உள்ளிட்ட கடுமையான திறன் முன்னேற்றச் செயற்பாடுகளுக்கு
உட்படுத்தப்பட்டனர்.
ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் தமது வணிகத் திட்டங்களை சமர்ப்பித்தமை இந்த நிகழ்வின்
சிறப்பு அம்சமாக அமைந்ததுடன், ஒவ்வொரு போட்டியாளர்களும் நடுவர்கள் மத்தியில் தமது
திட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை
அறிவித்ததுடன், வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு கேடயம்
மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் புதுமை மற்றும் தொழில்முனைவுத் தன்மை ஆகியவற்றை உருவாக்கும்
இதுபோன்ற போட்டிகளின் வகிபாகத்தை வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின்
செயலாளர் திருமதி.திலகா ஜயசுந்தர குறிப்பிடுகையில், “வெற்றியாளர்களைக் கொண்டாடுவது
மாத்திரமன்றி, பங்குபற்றுபவர்கள் மத்தியில் தொழில்முனைவு மனப்பான்மையை உருவாக்குவதே
SPARK போட்டி நிகழ்வாகும். இது திறன்கள், நம்பிக்கை மற்றும் புத்தாக்கமான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கான மீள்தன்மையை ஏற்படுத்தும் தளமாகும். தொழில்நுட்பத் தீர்வுகள்
முதல் சூழலுக்கு நட்பான தயாரிப்புக்கள் வரையிலான இவ்வருட பல்வகையான
விண்ணப்பங்களின் மூலம் எமது இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் உள்ளாற்றல்
வெளிப்படுத்தப்பட்டன. தமது யோசனைகளை உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய
வணிகங்களாக மாற்றுவதற்கும், படைப்பாற்றல் மிக்க பணியில் ஈடுபடுவதை
உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு ஊக்குவிப்பு, வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்பு அவசியம்”
என்றார்.
இறுதி நிகழ்வானது இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகள் மற்றும் இலங்கையின்
இளைஞர்களிடையே தொழில்முனைவு பற்றிய உணர்வைக் கொண்டாடுவதற்கும் அரசாங்க
அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள், கல்வியாளர்கள்,
தொழில்துறை மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தது. இந்தப் போட்டி
முழுவதிலும் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய பங்குதாரர்கள்,
அனுசரணையாளர்கள், நடுவர்கள், வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களையும் SPARK
இறுதிப்போட்டி அங்கீகரித்திருந்தது.
இறுதிப் போட்டி குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தக சம்ளேனத்தின் தலைவர்
திரு.துமிந்த ஹுலங்கமுவ குறிப்பிடுகையில், “இலங்கையின் இளம் தொழில்முயற்சியாளர்களின்
நம்பமுடியாத திறன் மற்றும் உள்ளாற்றலை வெளிப்படுத்தும் வகையில் SPARK 2024 இன் இறுதிப்
போட்டி அமைந்தது. தமது யோசனைகள் மற்றும் திறன்களைக் காட்சிப்படுத்தும் SPARK
தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதையிட்டு இலங்கை வர்த்தக சம்மேளனம்
பெருமையடைகின்றது. வெற்றியாளருக்கு எனது வாழ்த்துகள். இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள்
அனைவராலும் புதுமை மற்றும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டதுடன், தொழில்முனைவுப்
பயணத்தில் அனைவரும் உயர்ந்த இடத்தை அடைவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
எமது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலமாக இருக்கும் இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்கவும், அவர்களை வலுப்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன்
இருக்கின்றோம்” என்றார்.
பிரதான தொழில்முனைவுப் போட்டிக்கு மேலதிகமாக முதன்முறையாக SPARK இல் இளம்
ஊடகவியலாளர்களின் திறனை அங்கீகரிக்கும் வகையில் SPARK இளம் தொழில்முனைவு
ஊடகவியலாளர் மற்றும் SPARK இளம் தொழில்முனைவுசார் ஊடகவியலாளர் விருதுகள்
வழங்கப்பட்டன.
சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஜொய்ன்
சிம்சன் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் மயப்படுத்தல், மக்கள் தொகை மற்றும் காலநிலை
மாற்றம் ஆகிய மூன்று நிலைமாற்றங்களையும் இளம் தொழில்முயற்சியாளர்கள்
சமாளிப்பதற்கான தளமாக SPARK போட்டி அமைந்தது. புத்தாக்கமான திட்டங்களைத்
தயாரிக்கவும் அவற்றை ஊர்ஜிதம் செய்யவும், அந்த யோசனைகளை சிறந்த வணிகத்
திட்டங்களாக மாற்றுவதையும் இது ஊக்கப்படுத்தியது. இதில் பங்குபற்றியவர்களுக்குத்
தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டதுடன், தமது திறன் மற்றும்
தொடர்புகளை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையிலுள்ள அனைத்து
இளைஞர் யுவதிகளையும், குறிப்பாக இளம் பெண்களையும் SPARK 2025 போட்டியில்
கலந்துகொண்டு பெண் தொழில்முயற்சிகளை ஊக்குவித்துக் கொள்ளுமாறு நாம் அனைவரையும்
அழைக்கின்றோம். இந்த முயற்சியில் ஒத்துழைப்பு வழங்கக் கிடைத்தமையையிட்டு சர்வதேச
தொழிலாளர் தாபனம் பெருமையடைவதுடன், போட்டியாளர்கள் அனைவரும் தமது
தொழில்முனைவுப் பயணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”
என்றார்.
இளம் தொழில்முயற்சியாளர்கள் குறித்து கவனம் செலுத்திய SPARK 2024 போட்டியானது,
புதுமை, படைப்பாற்றல் மற்றும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில்
பங்கெடுப்பதற்கும், அதில் சிறந்து விளங்குவதற்கும் இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு
வாய்ப்பை வழங்கியுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.