2வது HSBC Ceylon Literary and Arts Festival நிகழ்வு தனது நோக்கங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளது

17

2வது தடவையாக இடம்பெறவுள்ள HSBC Ceylon Literary & Arts Festival நிகழ்வானது இலங்கையில் கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்த தனது நோக்கங்களை மேலும் மேம்படுத்தும் வண்ணம் இடம்பெறவுள்ளது. 100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கொழும்பு பொது நூலகத்தில், மேம்படுத்தப்பட்ட இடத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் அடையாளமாக, ஜனவரி 17 முதல் 19 வரை 50 க்கும் மேற்பட்ட புகழ்பூத்த எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபற்றும் 32 க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெறவுள்ளன. பிரசித்திபெற்ற இலக்கியவாதியான மித்தா கபூர் அவர்களுடைய நிபுணத்துவத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலாச்சார சாதனை மைல்கல்லானது Pulitzer பரிசு வெற்றியாளர்கள், Gratiaen பரிசைப் பெற்றவர்கள், மற்றும் அரச விருது பெற்றவர்கள் அடங்கலாக, பிரசித்தி பெற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு பேச்சாளர்களால் அலங்கரிக்கப்படவுள்ளது. மூன்று தினங்களாக இடம்பெறும் இந்நிகழ்வில் செயலமர்வுகள், குழுநிலை கலந்துரையாடல்கள், படைப்பாக்கத்திறன் அமர்வுகள் என இலக்கியம், கலை, திரைப்படம் மற்றும் இளைஞர் மேம்பாடு குறித்த பல்வகைப்பட்ட அம்சங்கள் அடங்கியுள்ளதுடன், கலாச்சார பரிமாற்றத்தில் செழுமையான பிணைப்பைத் தோற்றுவிக்கின்றது.             

இக்கொண்டாட்ட நிகழ்வு குறித்து Ceylon Literary & Arts Festival பணிப்பாளர் அஜய் வீர் சிங் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “குறிப்பாக இலக்கியத்தின் மீது விசேட கவனம் செலுத்தியவாறு, கலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான மேடையாகத் திகழ வேண்டும் என்பதே இந்த கொண்டாட்ட நிகழ்வின் ஒட்டுமொத்த இலக்கு. இலங்கையின் மென் ஆற்றலைக் கட்டியெழுப்பி, மேம்படுத்தும் ஆணையை இந்த மேடை கொண்டுள்ளது. சர்வதேச அரங்கத்தினர் மத்தியில் இலங்கை மீது கொண்ட நேர்பார்வையையும் இது வலுப்படுத்துகிறது. இளைஞர்,யுவதிகள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கலைகள் மற்றும் கலாச்சாரத்தில் அடுத்த தலைமுறையை ஈடுபடுத்த நாம் விரும்புகின்றோம். இதன் மூலமாக படைப்பாக்கத்துறைகளில் வாய்ப்புக்களைக் கண்டறிந்து கொள்ள அவர்களால் முடிவதுடன், வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில் முயற்சியாளர்களாக அவர்கள் தமது தொழில் பயணங்களை ஆரம்பித்துக் கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார். 

HSBC Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜனர் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “உலகின் மிகச் சிறந்தவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து, இலங்கையின் மிகச் சிறந்தவற்றை உலகிற்கு கொண்டு சென்று உரையாடல் தொடர்புகளை ஊக்குவித்து, உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் சிந்தனைகளைப் பகிரச் செய்வதே எமது குறிக்கோள். இலங்கையின் இலக்கியம் மற்றும் கலைகள் துறையை உலகிற்கு காண்பிக்க இது வழிவகுக்கும் என நாம் நம்புகின்றோம். இலங்கையிலுள்ள முன்னணி சர்வதேச வங்கி என்ற ரீதியில், எமது வாடிக்கையாளர்கள் கொழும்பில் தமக்கு அருகாமையிலுள்ள இடத்திலேயே சர்வதேச இலக்கியம் மற்றும் கலைகள் கொண்டாட்ட நிகழ்வை அனுபவிக்க முடியும் என்பது எமக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார். 

இலங்கையின் செழுமையான கலாச்சாரத் துறையின் மீது கவனம் செலுத்தியவாறு, உத்தியோகபூர்வ விருந்தோம்பல் கூட்டாளர்களான சினமன் கிரான்ட் மற்றும் கொழும்பு தாஜ் சமுத்ரா ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் HSBC Ceylon Literary & Arts Festival கொண்டாடப்படுகின்றது.    

சினமன் கொழும்பு ஹோட்டல்களின் பிராந்திய உப தலைவரும், சினமன் கிரான்ட் கொழும்பு ஹோட்டலின் பொது முகாமையாளருமான கமல் முனசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “சினமன் கிரான்டின் பொது முகாமையாளர் மற்றும் சினமன் கொழும்பு ஹோட்டல்களின் உப தலைவர் என்ற வகையில், Ceylon Literature Festival நிகழ்வுடன் கைகோர்ப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிகழ்வானது எமது செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகக் காணப்படுவதுடன், உள்நாட்டில் உதித்த வர்த்தகநாமம் என்ற வகையில், இத்தகைய முக்கியமான நிகழ்வொன்றுக்கு ஆதரவளிப்பதில் சினமன் மிகவும் பெருமை கொள்கின்றது. இக்கொண்டாட்ட நிகழ்வில் புகழ்பெற்ற பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இது எமது கலாச்சாரத் தோற்றத்தை செழுமைப்படுத்துவது மாத்திரமன்றி, எமது நாட்டின் அழகினை உலகிற்கு காண்பித்தவாறு பெருமளவு சுற்றுலாப் பிரயாணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் எனவும் உறுதியாக நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.   

தாஜ் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளரும், தாஜ் சமுத்ரா கொழும்பு பொது முகாமையாளருமான சாம்ராட் தத்தா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “பிரசித்திபெற்ற Ceylon Literary and Arts Festival 2025 நிகழ்வுடன் கைகோர்ப்பது குறித்து அறிவிப்பதில் தாஜ் சமுத்ரா கொழும்பு மிகவும் பெருமை கொள்கின்றது. படைப்பாக்கத்திறன் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை வளர்ப்பதில் எமது வர்த்தகநாமத்தின் பண்புகளை உறுதிப்படுத்தும் வண்ணம், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் தாஜ் கொண்டுள்ள இடைவிடாத அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது. உலகெங்கிலுமிருந்து புகழ்பூத்த எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை நாம் வரவேற்கின்ற நிலையில், கதை எழுத்தாக்கம் மற்றும் கலாச்சார பன்மைத்துவம் ஆகியவற்றின் மகத்தான கொண்டாட்டத்திற்குப் பங்களிப்பது எமக்கு மிகவும் கௌரவமளிக்கின்றது. கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் உற்சாகமான பங்குபற்றலுடன், இந்நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு அஜய் மற்றும் அவரது அணிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.             

இக்கொண்டாட்ட நிகழ்வு நான்கு தனித்துவமான பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் படைப்பாக்கத் துறையின் வேறுபட்ட அம்சங்களை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமோத வீரசேகர அவர்களின் தயாரிப்பில் ஜோன் கீல்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து நடைபெறும் கலைக் கொண்டாட்டமானது, இலக்கியத்துடன், காண் கலையை இணைத்து, ‘Semi-Autobiography’ என்ற தொனிப்பொருளில் கவனம் செலுத்தியுள்ளதுடன், இளம் மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு சிறந்த மேடையை வழங்குகின்றது. சமகால காணல் கலை வெளிப்பாட்டைக் காண்பித்தவாறு 16 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்புக்களை Art Exhibit நிகழ்வு உள்ளடக்கியுள்ளது.       

கடந்த ஆண்டில் 11 க்கும் மேற்பட்ட நுழைவுகளை ஈர்த்து, ஈட்டப்பட்ட பெரும் வெற்றியை அத்திவாரமாகக் கொண்டு, Future Writers Program நிகழ்வானது, ஜனவரி 18, சனிக்கிழமையன்று விருதுகளை வென்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்களின் தலைமையில், 16-29 வயதிற்குட்பட்ட வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான செயலமர்வைக் கொண்டதாக இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், Dilmah இதனை தயாரித்து வழங்குகின்றது.      

தனது கூட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்திற்கான தனித்துவமான மேடைகளை வழங்கி இக்கொண்டாட்ட நிகழ்வு அவர்களுக்கு பெருமையுடன் ஆதரவளிக்கின்றது. இவ்வாண்டில் Clouds by SOZO ன் உயர் வகை மலை நீரூற்று குடிநீர் இக்கொண்டாட்ட நிகழ்வின் உத்தியோகபூர்வ மற்றும் பிரத்தியேக மலை நீரூற்று குடிநீர் கூட்டாளராக செயற்படுவதுடன், ஒட்டுமொத்த அனுபவத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகின்றது. எமது அறிவுக் கூட்டாளர்களான British Council மற்றும் Goethe-Institut ஆகியன தாம் வழங்கும் ஆதரவுடன் கொண்டாட்டத்தை தொடர்ந்தும் செழுமைப்படுத்தி வருகின்றன.         

சிறுவர் கொண்டாட்ட நிகழ்வானது மிகவும் ஆர்வமூட்டுகின்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச எழுத்தாளர்களின் கலவையைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் 6 முதல் 13 வயதிற்குட்பட்ட இளம் உள்ளங்களுக்கு இடைச்செயற்பாடுகள் கொண்ட புத்தக வாசிப்பு மற்றும் படைப்பாக்கத்திறன் அமர்வுகளை நடத்துவர். பிரசித்திபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் விமுக்தி ஜெயசுந்தர அவர்களின் திறமையான தயாரிப்பின் கீழ் இடம்பெறும் திரைப்பட கொண்டாட்ட நிகழ்வானது, வலிமைமிக்க கதை எழுத்தாக்க ஊடகமாக திரைப்படத்தைக் கொண்டாடுவதுடன், மிகவும் வலுவான குறுத் திரைப்படப் போட்டியானது ஆர்வத்தைத் தூண்டும் காட்சிப் படைப்புக்கள் மூலமாக, தமது படைப்பாக்கத்திறன் இலட்சியங்களை வெளிக்கொண்டு வருவதற்கு இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வலுவூட்டும்.

பெரும் எண்ணிக்கையான சிறப்புமிக்க கூட்டாளர்கள் இக்கொண்டாட்ட நிகழ்வுக்கு ஆதரவளிக்கின்றனர். கலாச்சார புத்தாக்கம் மற்றும் உலகளாவிய கலைப் பரிமாற்றம் மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்வின் title partner ஆக HSBC இணைந்துள்ளது. இணை அனுசரணையாளர்களாக Dilmah Ceylon, Cinnamon Grand, Taj Samudra, John Keells Foundation, மற்றும் Clouds by SOZO ஆகியன கைகோர்த்துள்ளன. British Council, Goethe-Institut, Synamon Global, மற்றும் the Rukmini Tissanayagam Trust ஆகியனவும் இக்கொண்டாட்ட நிகழ்வுக்கு விலைமதிப்பற்ற ஆதரவை வழங்குகின்றன. மேலும், Wijeya Newspapers, Daily Mirror, Sunday Times, Hi!!, Acorn, Sarasavi, மற்றும் Hardtalk போன்ற முக்கிய கூட்டாளர்கள் இக்கொண்டாட்ட நிகழ்வை முன்கொண்டு செல்வதற்கு பங்களிக்கின்றனர்.     
நாளைய இளைஞர்களின் எதிர்காலத்தின் மீது முதலீடு செய்து, அடுத்த தலைமுறை படைப்பாற்றல் சிந்தனையாளர்கள் மற்றும் சிந்தனைச் சிற்பிகளும் கலைகள் மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் மாணவர்களுக்கு இலவச அனுமதிகளையும் இக்கொண்டாட்ட நிகழ்வு பெருமையுடன் வழங்குகின்றது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இலங்கையின் கலாச்சார மற்றும் உலகளாவிய கலையின் மிகச் சிறந்த கொண்டாட்டம் குறித்த ஆர்வம் இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது. சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல்கள், ஆழமாக மூழ்கச் செய்யும் செயலமர்வுகள் என ஒவ்வொரு அமர்வும் ஆர்வத்தைத் தூண்டி, ஈடுபாட்டை வளர்க்கும் வகையில் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நிகழ்வு குறித்து அறிந்து கொள்ளவும், நிகழ்வில் கலந்துகொள்ள உங்களுக்கான அனுமதிகளை பதிவு செய்து கொள்ளவும் www.ceylonliteraryfestival.com என்ற தளத்தை நாடுங்கள்.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here