பங்களாதேஷில் எழுந்துள்ள நெருக்கடிக்கு மத்தியிலும் 67% வரிக்குப் பின்னரான இலாபத்தை JAT நிறுவனம் பதிவாக்கியுள்ளது

1
  • வரிக்குப் பின்னரான இலாபம் கடந்த ஆண்டில் ரூபா 306 மில்லியனாக காணப்பட்ட நிலையில், அது ரூபா 512 மில்லியன் என்ற பாரிய அதிகரிப்பை பதிவாக்கியுள்ளது  
  • இலங்கை வருமானம் 8% ஆல் அதிகரித்து ரூபா 3,287 மில்லியனாக பதிவாகியுள்ளது
  • பங்களாதேஷ் நெருக்கடி காரணமாக குழும வருமானம் 7% ஆல் வீழ்ச்சி கண்டுள்ளது  
  • தனது தயாரிப்புக்களுக்கான உற்பத்தி மற்றும் சேவைகளை தனது நிறுவனங்கள் மூலமாக மேற்கொண்டமையால் மொத்த இலாப மட்டம் 2% ஆல் அதிகரித்துள்ளது
  • ஒருங்கிணைப்பு (Binder) மற்றும் ஒட்டுப்பொருள் (alkyd resin) தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கி வருகின்றன

இலங்கையில் மரப்பூச்சுக்கள் மற்றும் தூரிகைகள் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற JAT Holdings PLC, 2ம் காலாண்டு மற்றும் 2024/25 நிதியாண்டின் முதற்பாதியில் தனது நெகிழ்திறனை வெளிக்காண்பித்துள்ளதுடன், தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மகத்தான மதிப்பை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. அந்த வகையில், 2024 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் காணப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், வரிக்குப் பின்னரான இலாபம் 67% அதிகரிப்பைக் கண்டு, ரூபா 512 மில்லியனை எட்டியுள்ளது. அதேசமயம், இக்காலப்பகுதியில் இலங்கை தொழிற்பாடுகள் மூலமான குழுமத்தின் வருமானம் 8% ஆல் அதிகரித்து, ரூபா 3,287 மில்லியனாகப் பதிவாக்கியுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள JAT இன் ஒருங்கிணைப்பு (Binder) மற்றும் ஒட்டுப்பொருள் (alkyd resin) உற்பத்தித் தொழிற்சாலைகளின் நேர்மறை பலனின் விளைவாக, மொத்த இலாப மட்டம் 2% ஆல் அதிகரித்துள்ளது. மிகவும் கவனமான முறையில் செலவுகளை நிர்வகிக்கும் JAT இன் அணுகுமுறை மற்றும் முன்னைய ஆண்டில் சந்தைப்படுத்தல் செலவுகள் குறித்து மூலோபாய நகர்வாக மேற்கொண்ட அதிகரிப்பின் பலனாக தற்போது கிடைக்கின்ற பிரதிபலன்கள் காரணமாக விற்பனை மற்றும் விநியோகச் செலவுகளும் 10% ஆல் குறைவடைந்துள்ளன.                  

குழுமம் மிகச் சிறந்த வழிகளில் கட்டுப்பாட்டு முயற்சிகளை கைக்கொண்டிருப்பினும், மீளாய்விற்குட்படும் காலப்பகுதியில் பங்களாதேஷில் நிலவிய பாதகமான பொருளாதார சூழ்நிலை மற்றும் சமூக அரசியல் நிலைமைகளால் அதன் தொழிற்பாடுகள் பாதிப்பிற்குள்ளாகின. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தம் இந்த பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இது எவ்வாறு இருப்பினும், இந்த சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குழுமத்தின் மூலோபாய நகர்வுகள், மாறுகின்ற சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் தன்னை மாற்றிக்கொள்ளும் அதன் திறனை வெளிக்காண்பிக்கின்றது. பங்களாதேஷ் சந்தையில் தற்போதைய சூழலில் செலவுகள் குறித்து மிகவும் அவதானத்துடன் முடிவுகளை எடுக்கின்ற சந்தை நிலைமையில் CoatEx என்ற சிக்கன விலை கொண்ட மரப்பூச்சுத் தயாரிப்பு அண்மையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு முயற்சியாகும். பங்களாதேஷிலுள்ள JAT இன் உற்பத்தி வசதியின் அனுகூலத்துடன், திறன்மிக்க மற்றும் கட்டுபடியான விலை கொண்ட ஒரு தயாரிப்பை CoatEx வழங்குகின்றது. இறுக்கமான அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில், இறக்குமதிகளை நம்பியுள்ள ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறந்த அனுகூலத்தை இது ACL க்கு (பங்களாதேஷிலுள்ள JAT இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனம்) வழங்குகின்றது.              

இந்த வகையில், முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாக்கப்பட்ட ரூபா 4,878 மில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில், மொத்த குழும வருமானம் 7% ஆல் வீழ்ச்சி கண்டு, ரூபா 4,536 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. பங்களாதேஷின் வருமானம் ரூபா 1,148 ஆக வீழ்ச்சி கண்டு, 33% சரிவைக் கண்டமையே இதற்கான பிரதான காரணம். இதன் விளைவாக, வரிக்கு முன்னரான இலாபம் 3% அளவில் சிறிய வீழ்ச்சியைப் பதிவாக்கியுள்ளது. கடன் மூலமாக முதலீடுகளுக்கு நிதியளித்தமை காரணமாக நிதிச் செலவுகள் சற்று அதிகரித்துள்ளன. இதற்கிடையில், இந்தியா மற்றும் மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து நாடுகளிலிருந்து ஈட்டப்படும் வருமானம் 9% சரிவைப் பதிவாக்கியுள்ளதுடன், மாலைதீவில் அந்நியச் செலாவணி கொள்கைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன.           

வருமானங்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக, மீளாய்விற்குட்படும் காலப்பகுதியில் மொத்த இலாபம் 2% வீழ்ச்சியுடன் ரூபா 1,393 மில்லியனாக பதிவாகியுள்ளது. அதேசமயம், சம்பளங்கள் மற்றும் ஊதியங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக நிர்வாகச் செலவுகள் 5% ஆல் அதிகரித்து ரூபா 458 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 2024/25 நிதியாண்டின் முதற்பாதியில் சீரான தொழிற்பாட்டு பெறுபேற்றுத்திறனை வெளிப்படுத்த குழுமத்தால் முடிந்துள்ளதுடன், முன்னைய ஆண்டிலிருந்து சிறிது அதிகரிப்புடன், தொழிற்பாட்டு செயற்பாடுகள் ரூபா 521 மில்லியனை ஈட்டியுள்ளன.    

JAT Holdings PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷால் பேர்டினான்டோ அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “குறிப்பாக, பங்களாதேஷில் சவால்மிக்கதொரு காலகட்டத்தில் நெகிழ்திறனுடனும், மூலோபாயரீதியான இலக்குடன் நாமம் வெற்றிகரமாக அதனைக் கடந்துள்ளோம். நாம் தொடர்ந்தும் முன்செல்கையில், அந்த நாட்டின் பொருளாதார சூழல் முன்னரை விட மேம்பட்டு, மாற்றம் கண்டு வருவது எமக்கு நம்பிக்கையளிக்கின்றது. அடுத்து வரும் ஆறு மாதங்களில் கணிசமான வளர்ச்சியுடன், எமது எதிர்பார்ப்புக்களை அடையப்பெற்று, எமது தொழிற்பாடுகள் மத்தியில் மேம்பாட்டை முன்னெடுக்க முடியுமென நாம் எதிர்பார்க்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் மரப்பூச்சுப் பிரிவில் தொடர்ந்தும் சீரான வளர்ச்சி காணப்படுவதுடன், உள்வாரியான ஒட்டுப்பொருள் உற்பத்தியின் செயல்திறன் காரணமாக வலுப்பட்டுள்ளது. JAT இன் நீர் அடிப்படையிலான மரப்பூச்சுக்களுக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது. எனினும், விலைப் போட்டி காரணமாக எமல்ஷன் தயாரிப்புக்கள் சில சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், சந்தைப் பங்கினை மீளவும் கைப்பற்றுவதற்காக, புதுப்பிக்கப்பட்ட விலை நிர்ணய மூலோபாயமொன்றை குழுமம் தற்போது பரிசீலித்து வருகின்றது. இதற்கிடையில் தூரிகைகள் பிரிவு உறுதியான பெறுபேறுகளை காண்பித்துள்ளதுடன், மீளாய்வுக்கு உட்பட்டுள்ள காலப்பகுதியில் தொடர்ச்சியான வளர்ச்சியை ஈட்டி வந்துள்ளதுடன், உள்நாட்டு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதில் JAT காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதற்கு மேலும் உதவியுள்ளது.      

JAT Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈலியன் குணவர்த்தன அவர்கள் குழுமத்தின் எதிர்கால வெளித்தோற்றம் குறித்து கருத்து வெளியிடுகையில், “செலவுகளை திறம்பட நிர்வகித்து, நிலைபேணத்தக்க வழியில் தொழிற்பாடுகளை முன்னெடுப்பது குறித்த எமது மூலோபாயம் ஏற்கனவே வெளிப்படையான பலன்களைத் தோற்றுவித்துள்ளது. எமது ஒருங்கிணைப்பு (Binder) மற்றும் ஒட்டுப்பொருள் (alkyd resin) உற்பத்தித் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளமை எமது சந்தைகளுக்கு சீரான மற்றும் நம்பகமான வழங்கல் சங்கிலி ஆதரவுக்கு எமக்கு இடமளித்துள்ளதுடன், செலவுகளின் ஸ்திரத்தன்மை மற்றும் தொழிற்பாட்டு நெகிழ்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றது. நாம் தொழிற்படும் சமூகங்கள் மத்தியில் மேம்பாட்டை முன்னெடுக்கும் முயற்சிகள் மீது நாம் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி, எமது சந்தை ஸ்தானத்தை வலுப்படுத்தவல்ல நீண்ட கால நம்பிக்கையை கட்டியெழுப்புவோம். தொழிற்பாட்டுத்திறனை மேம்படுத்தும் இலக்குடன் நாம் மேற்கொண்டுள்ள மூலேபாய முதலீடுகள் மற்றும் முயற்சிகளின் பலன்களை அடுத்து வரும் ஆறு மாதங்களில் எம்மால் கண்டுகொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டார்.  

JAT கொண்டுள்ள மூலோபாய அபிலாஷைகளுடன் ஒன்றியதாக, இலங்கைப் பொருளாதாரம் வலுவடைந்து, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டில் புதிய மற்றும் தற்போதைய செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் குழுமம் கவனம் செலுத்தும். 2024 நவம்பரில் கொழும்பில் திறக்கப்படவுள்ள JAT lifestyle studio மற்றும் 2024 ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் திறக்கப்பட்டுள்ள SEAFORM ஆகியன, வீட்டு மற்றும் வாழ்க்கைமுறை தீர்வுகளில் நிறுவனத்தின் புத்தாக்கமான அணுகுமுறை குறித்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும். இக்காலாண்டில் அவுஸ்திரேலியாவுக்கான தனது முதலாவது ஏற்றுமதியை JAT மரப்பூச்சுகள் மேற்கொண்டுள்ளதுடன், இச்சந்தையில் கணிசமான தொழிற்பாட்டாளராக மாறுவதற்கு ஆவலாக உள்ளோம். மேலும், JAT தற்போது முன்னெடுத்து வருகின்ற மரப்பூச்சுக்களுக்கான NVQ பயிற்சி நெறி – மட்டம் 4, சுவர் பயன்பாடுகளுக்கான பயிற்சி நெறி மட்டம் 3 ஆகியன சமூகத்திற்கு வலுவூட்டி, நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, தொழிற்திறன் கொண்ட தொழிற்படையொன்றைத் தோற்றுவிப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. சமூகம் மற்றும் வாடிக்கையாளர்கள் நோக்கிய முயற்சிகளில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு, நிலைபேணத்தக்க வளர்ச்சி மீது அர்ப்பணிப்புடன் உள்ள தொழிற்துறை முன்னோடி என்ற வகிபாகத்தை JAT தொடர்ந்தும் உறுதிப்படுத்தி வருகின்றது.              

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here