SPARK திறன்மிக்க இளம் தொழில்முனைவோருக்கான போட்டியின் 2024 ஆம் ஆண்டு பதிப்பின் முதல் சுற்று அண்மையில் முடிவடைந்ததுடன், பல்வேறு வயதுப் பிரிவுகள் மற்றும் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இளம் போட்டியாளர்கள் வணிகத்துக்கான அடிப்படைத் திறன் மற்றும் வணிகத் திட்டமிடல் தயாரிப்பு போன்றவற்றுக்கான மேம்பட்ட பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர். இலங்கையின் அடுத்த தலைமுறை வணிகத் தலைவர்கள் தமது நடைமுறைத் திறன்கள் மற்றும் நிஜ உலக வணிக புத்திசாலித்தனத்துடன் தொழில்முனைவுக்கான நிலைமாறும் அணுகுமுறையைப் பெறுவதற்கான வருடாந்த திறன் தளமே SPARK ஆகும். இது ‘பாடசாலை’ மற்றும் ‘திறந்த’ என்ற இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றது.
சர்வதேச தொழிலாளர் தாபனம், தெற்காசிய தொழில்முனைவுத் தலைமைத்துவத் திட்டம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை வர்த்தக சம்மேளனம் SPARK ஐ ஏற்பாடு செய்திருப்பதுடன், இதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதி உதவி அளிக்கின்றது. SPARK இற்கு அதிகரித்துவரும் மக்களின் நன்மதிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாயகம் மனோரி திசாநாயக்க குறிப்பிடுகையில், “இவ்வருடத்தில் பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் போட்டிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்ததுடன், இவற்றில் இரண்டு பிரிவுகளின் கீழ் 100 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட வயதுப் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன், இந்தப் பிரிவினரில் 33% பெண்களாகும். இதன் முதலாது சுற்றுப் போட்டிகள் தற்பொழுது முடிவடைந்திருப்பதுடன், இதில் தெரிவுசெய்யப்பட்ட முப்பது சிறந்த போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்காக அறிவிக்கப்படுவார்கள். இதில் போட்டியாளர்களுக்கு வதிவிட பயிற்சி முகாம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், இதில் வணிக முன்மொழிவை முன்வைக்கும் செயல்முறை குறித்து அங்கீகரிக்கப்பட்ட வணிக ஆலோசகர் குழுவிடமிருந்து போட்டியாளர்கள் ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்” என்றார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்றில் கலந்துகொள்ளும் SPARK போட்டியாளர்களின் திறனை வளர்ப்பதில் வழிகாட்டிகளும், பயிற்சியாளர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர். SPARK இற்கான ஒத்துழைப்பு கல்வியியலாளர்கள் மற்றும் வெற்றிகரமான வணிக முயற்சிகளின் கலவையாக இருப்பதால் போட்டியாளர்களுடன் ஒருவரோடு ஒருவர் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி தொழில்முனைவின் நிலைமாற்றுத் தன்மைக்கு வழிகாட்டுவதில் தனித்துவமான நிபுணத்துவத்தை வழங்க முடிந்துள்ளது. 2024 வழிகாட்டிகள் குழாமில் பணியாற்றிய SquareHub இன் நிறுவுனர் திரு.கனிஷ்க வீரமுண்ட தெரிவிக்கையில், “இந்த வருடத்துக்கான விண்ணப்பங்கள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உணவுசார் புத்தாக்கங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற பரந்துபட்ட துறைகளைக் கொண்டவையாகவும் காணப்பட்டன. ஆரம்பப் பயிற்சி முகாமில் சிறந்த முப்பது போட்டியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும், வழிகாட்டல் அமர்வுகளில் அவர்களின் வணிக முன்மொழிவுகளை செம்மைப்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன். இறுதிச் சுற்றுக்குச் செல்லக் கூடிய மேலும் சுவாரஷ்யமான வணிகத் திட்டங்களை நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
பெறுமதியான திறன்கள் மற்றும் வணிகத் திட்டங்கள் முதலாவது சுற்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். முதலாவது சுற்றில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் எஸ்.துஷாந்தன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகையில், “SPARK இல் போட்டியிடுவது எனக்கான பாதையைத் திறந்துள்ளது. பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை, வளர்ந்து வரும் உலகளாவிய வணிகப் போக்குகளைப் புரிந்து கொள்ளும் திறன், சந்தைப்படுத்தல் மற்றும் உத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், வணிகத் திட்ட மேம்பாடு, நிதி மற்றும் வணிக சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் போன்ற விடயங்களில் புதிய திறன்களை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தத் திறன்களின் ஊடாக எனது வணிகத் திட்டத்தை பல்வேறு கோணங்களில் மேலும் மேம்படுத்த ஆரம்பித்துள்ளேன். ஆரம்பப் பயிற்சி முகாமில் பங்குபற்றும் வரைக்கும் என்னால் பொறுத்திருக்க முடியாமல் உள்ளது. இறுதிச் சுற்றுக்குச் செல்வதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.
2024 SPARK போட்டி முன்னெடுத்துச் செல்லப்படும் போது, இரண்டாவது சுற்றில் வணிகத் திட்டங்களைத் தயாரிக்கும் ஆரம்பப் பயிற்சி முகாம் மற்றும் தனிப்பட்ட பயிற்சிகள், வழிகாட்டல் அமர்வுகள் என்பன 2024 செப்டெம்பர் 05ஆம் திகதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும். சிறந்த 5 இறுதிப் போட்டியாளர்கள் தமது திட்டங்களை தேசிய மட்டத்திலான மேடையில் காட்சிப்படுத்துவதுடன், அவர்களிலிருந்து இவ்வருடத்தின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இந்த வருட SPARK இறுதிப் போட்டியில் புதியதொரு முயற்சியாக இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவு மனப்பான்மையை ஊக்குவிக்கும் மற்றும் இலங்கையில் வணிகத்துக்கு ஏற்ற நட்பான சூழலை ஊக்குவிக்கும் இளம் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் “இளம் தொழில்முனைவு ஊடகவியலாளர்” மற்றும் “இளம் தொழில்முனைவுசார் ஊடகவியலாளர்” ஆகிய இரண்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
SPARK போட்டி தொடர்பான பிந்திய தகவல்களை SPARK இன் https://spark.chamber.lk/ என்ற இணையத்தளம் மற்றும் SPARK இன் Facebook, Instagram மற்றும் Linkedin ஆகிய சமூக ஊடகங்களின் ஊடாகவும் அறிந்துகொள்ளலாம்.