20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையின் பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா (DIVA), ‘தீவா கரத்திறஂகு வலிமை’ தொழில்முயற்சியாண்மைத் திறன் விருத்தி நிகழ்வில் சிறந்து விளங்கிய வெற்றியாளர்களுக்கு 2024 பெப்ரவரி 28 அன்று காலியில் விருது வழங்கி கௌரவித்தது. Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெண் தொழில் முயற்சியாண்மையையும் திறன் விருத்தியையும் மையமாகக் கொண்ட விரிவான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது. மிகக் கவனமான மதிப்பீட்டுச் செயன்முறை ஒன்றின் பின்னரே குறித்த பயிற்சி அமர்வுகளில் ஆகச் சிறந்து விளங்கிய நான்கு தொழில் முனைவோருக்கு இந்நிகழ்வில் விருது வழங்கப்பட்டது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அனைவரும் முகங்கொடுத்துவரும் நிலையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களில் ஈடுபடும் தொழில்முனைவோர், நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி நாட்டை பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். எமது இல்லத்தரசிகளும் தமது வீட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவாறே தொழில்முனைவோர்களாக உருமாறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக தையல், பின்னல், சமையற் கலை போன்ற தமது வழக்கமான வேலைகளைத் தாண்டி நாட்டின் தொழிற்படையின் முக்கிய அங்கமாகவும் தேசிய பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்லும் சக்தியாகவும் பெண் தொழில் முனைவோர் மாறியிருப்பது போற்றுதற்குரியது. தொழில் நேர்த்தி முதலான இவர்களது பல்வேறுபட்ட திறமைகள் தொழில் முயற்சியாண்மைத் துறைக்குள் நுழைவதற்கான பலத்தை அவர்களுக்கு வழங்கியிருப்பதோடு அதன்மூலம் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வல்லமையையும் வழங்கியுள்ளது.
பெண் தொழில் முனைவோரின் இவ்வாறான அசாத்திய திறமைகளை இனங்கண்டு அவரகளின் வியாபார தொழில் நுணுக்கங்கள், திறன்கள், ஆற்றல்கள் என்பவற்றைப் பட்டை தீட்டி ஆகச்சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதனை தலையாய நோக்கமாகக் கொண்டு ‘தீவா கரத்திறஂகு வலிமை’ என்னும் தொழில் முயற்சிசார் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அதனை ஒழுங்காக நடாத்திச் செல்வதற்கும் வியாபார உத்திகளை திறம்பட வகுப்பதற்கும் தேவையான நம்பிக்கை, அறிவு, திறன் என்பவற்றை வழங்கி பெண் தொழில் முனைவோருக்கு வலுவூட்டும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில பெண்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்க போதிய நேரமோ, அறிவோ அல்லது உதவியோ கிடைப்பதில்லை எனும் உண்மையை உணர்ந்து, ‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள திறமையான பெண் தொழில்முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதை தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெண்களின் வீட்டுப் பாவனைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் தீவா கரத்திறஂகு வலிமை திட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்களின் திறமை மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அவர்களின் வளர்ச்சியையும் வியாபார மூலதனத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சியின் முடிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் பெண் தொழில்முனைவோருக்கு நிதி உதவிகளை வழங்குவதையும் தீவா நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் கலந்துகொண்ட பெண்களின் திறமை, முன்னேற்றம் என்பவற்றின் அடிப்படையில் பின்வரும் பெண்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில், அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஆர். கே. லக்மாலி (மானெல்) (பைட்ஸ் மற்றும் இனிப்புகள்) முதலாமிடத்தையும்; கரந்தெனியவைச் சேர்ந்த எச்.ஆர்.எம் சரோஜனி (குரக்கன் பவுடர் உற்பத்தி, தேன் மற்றும் பூண்டு. காய்ந்த வாழைப்பழம் ) இரண்டாம் இடத்தையும், அம்பலாங்கொடையைச் சேர்ந்த டபிள்யூ. சி. மானெல் குமாரி (பாதணிகள்),திவிதுறையைச் சேர்ந்த ஏ.கே. ரம்யா பிரியாணி (காளான்கள் மற்றும் உணவுத் தொழில்நுட்பம்) ஆகியோர் மூன்றாம் இடங்களையும் தமதாக்கிக்கொண்டனர்.
“தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற பழமொழிக்கிணங்க, எதிர்கால சந்ததியை வளர்த்தெடுக்கும் பெண் நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்களிப்பைச் செய்கிறாள். அவளின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடி அவளுக்கு உறுதுணையாக இருப்பதே இம்முன்னெடுப்பின் நோக்கம். அந்த வகையில் ‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டமானது, பெண்களுக்கு இயல்பாய் அமைந்த பலத்தையும் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து, வணிக வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ள தொடர்ச்சியாக ஊக்கமளித்து வருகிறது.