சினோபெக், புதிய தோற்றம் மற்றும் வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளது

29

Sinopec Energy Lanka (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் கால்பதித்து முதலாவது ஆண்டு நிறைவையொட்டி, மாபெரும் சாதனையாக நவகமுவ Trans Lanka Filling Station இல் புனரமைப்புச் செய்யப்பட்ட தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை வெகுவிமரிசையாக திறந்து வைத்துள்ளது.     

150 எரிபொருள் நிலையங்களின் செயல்பாடுகளை 7 மாதங்களாக சீராக முன்னெடுத்து வந்துள்ள நிலையில், நாட்டின் எரிசக்தித் துறைக்கு புத்துயிரளிப்பதில் சினோபெக் நிறுவனத்தின் நீண்டகால அடிப்படையிலான அர்ப்பணிப்பை இப்புதிய முயற்சி சுட்டிக்காட்டுகின்றது. செயற்திட்டங்களின் புனரமைப்பு, வசதிகளின் மேம்பாடு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த மேம்பாடுகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளுடன், முகவர்கள் மற்றும் கூட்டாளர்களின் நிலைபேணத்தகு வளர்ச்சிக்கு சினோபெக் வலுவூட்டுகின்றது.

வெளித்தோற்றம் மற்றும் வசதிகளின் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை கணிசமான அளவில் மேம்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மனிதவளங்கள் சார்ந்த பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக சினோபெக் நிறுவனத்தின் புனரமைப்பு கோட்பாடுகள் காணப்படுகின்றன.

எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், அடுத்த 3 ஆண்டு காலப்பகுதியில் எஞ்சியுள்ள 149 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் புனரமைப்புச் செய்வதற்கு சினோபெக் திட்டமிட்டுள்ளதுடன், புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான வாய்ப்புக்களையும் ஆராய்ந்து வருகின்றது. எரிசக்தித் துறையில் திறன்கொண்ட தொழிற்படையை விருத்தி செய்ய உதவும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தகமை தரப்படுத்தல் முறைமை ஆகியவையும் கட்டியெழுப்பப்படும். வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் என இருசாராரின் விசாரணைகளுக்கு திறன்மிக்க வழியில் தீர்வளிப்பதற்காக பல மொழிகளிலான வாடிக்கையாளர் சேவை மையமும் முழுமையான வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

‘உட்கட்டமைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் மூலோபாயரீதியான முதலீடுகளின் மூலமாக எரிசக்தி துறையை மேம்படுத்தும் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் முயற்சிகள் காணப்படுகின்றன. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் வழிகாட்டலுடன் இலங்கையில் பெட்ரோலிய துறையில் அதியுயர் தராதரங்களை தோற்றுவித்து, இலங்கைக்கு வலுவூட்டுவதில் சினோபெக் அர்ப்பணிப்புடன் ஈடுபடும்’ என்று Sinopec Energy Lanka நிறுவனத்தின் பொது முகாமையாளர் வாங் ஹைனி அவர்கள் குறிப்பிட்டதுடன், நிலைபேணத்தகு மற்றும் சுபீட்சமான எதிர்காலம் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புதில் சினோபெக் நிறுவனத்தின் அர்ப்பணிப்புடனான உழைப்பையும் மீள உறுதிப்படுத்தினார்.     

கௌரவ இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக, சீன தூதரகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் கௌரவ டாங் ஹீ லீ மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

அண்மைய சீரற்ற காலநிலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் Sinopec சில்லறை வியாபார அணியினர் நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதற்கமைவாக, அத்தகைய நபர்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொதிகள் மற்றும் சுத்தமான குடிநீரை அணியினர் கையளித்து வைத்தனர்.      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here