சதாஹரித, வரலாற்றில் மிகப் பாரிய அகில் மர (வல்லப்பட்டை) தொழில்நுட்ப பகிர்வு ஒப்பந்தமொன்றில் மலேசியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது

22

இலங்கையில் முதல் ஸ்தானத்தில் திகழும் வணிகரீதியான வனவியல் முகாமைத்துவ நிறுவனமும், நிலைபேற்றியலுடனான வழியில் வளர்க்கப்பட்ட அகில் மரம் மற்றும் ஏனைய பசுமை முதலீடுகளில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமுமான சதாஹரித பிளான்டேஷன்ஸ் லிமிட்டெட் (சதாஹரித), மிக முக்கியமான ஒரு சாதனை குறித்து அண்மையில் அறிவித்துள்ளது. அகில் மரங்களுக்கான நோய்த்தடுப்பு மருந்தான “SP Tech” என்ற தனது தனியுரிம தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து, விற்பனை செய்வதற்காக, மலேசியாவிலுள்ள அகில் மர வளர்ப்பாளர்களுடன் ஒப்பந்தமொன்றில் இந்நிறுவனம் வெற்றிகரமாக கைச்சாத்திட்டுள்ளது. நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மூலமாக இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இயற்கையான சேர்க்கைப்பொருட்களை உபயோகித்து அகில் மரங்களில் பிசின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்பகட்டமாக, ஆண்டுதோறும் ஒரு மில்லியன் அகில் மரங்களுக்கு நோய்த்தடுப்பு மருந்து ஏற்றப்படுவதுடன், மலேசியாவில் மூன்று மாநகரங்களில் மூன்று புதிய வல்லப்பட்டை உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.        

2024 ஜுன் 26 அன்று இதற்கான ஒப்பந்தம் மலேசியாவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், சதாஹரித நிறுவனத்திற்கு மட்டுமல்லாது இலங்கையின் வணிகரீதியான வனவியல் துறைக்குமே முக்கியமானதொரு சாதனையாக மாறியுள்ளது. அந்த வகையில், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் அபிவிருத்திகளின் பலனாக, 2028 ஆம் ஆண்டளவில் வல்லப்பட்டை எண்ணெய்க்கான உலகளாவிய கேள்வியில் 30% வரை பூர்த்தி செய்யப்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.    

சர்வதேச கூட்டாளர்கள் சதாஹரித நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த மூலோபாயக் கூட்டாண்மை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், இத்தொழில்துறையில் முன்னோடி என்ற நிறுவனத்தின் ஸ்தானத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. சதாஹரித அறிமுகப்படுத்திய புத்தாக்கமிக்க “SP Tech” என்ற தொழில்நுட்பம், வல்லப்பட்டை விளைச்சலை பன்மடங்கு பெருக்கி, உயர்தர வல்லப்பட்டை தயாரிப்புக்களுக்கு சர்வதேசரீதியாக நிலவும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு கணிசமான அளவில் முன்னேற்றம் காண உதவும். நிலைபேணத்தக்க நடைமுறைகள் மற்றும் பசுமை முதலீடு ஆகியவற்றின் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்புடன் இச்சாதனை ஒத்திசைவதுடன், உள்நாட்டிலும், உலகளாவிலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மரங்களை நாட்டி, 47,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கியுள்ளது.     

இந்த மகத்தான சாதனை குறித்து சதாஹரித நிறுவனங்கள் குழுமத்தின் தலைவர் திரு. சதிஸ் நவரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் நிபுணத்துவ பகிர்வு ஆகியவற்றினூடாக மலேசிய சந்தைக்கு எம்மை விஸ்தரித்துள்ளமை சூழலைப் பேணிப்பாதுகாப்பதில் எமது முன்னோடி உணர்வு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. தனித்துவமான, நிறுவனத்தினுள்ளேயே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதன் மூலமாக, எமது சர்வதேச அடிச்சுவட்டை நாம் மேம்படுத்தும் அதேசமயம், இலங்கையின் அந்நியச்செலாவணி வருவாய்க்கும் பங்களிக்கின்றோம். இத்தொழிற்துறையின் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு மிகப் பாரியதொரு நிகழ்வாக மலேசியாவுடனான கூட்டாண்மை மாறியுள்ளது என்பதுடன், சதாஹரித மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது என்பதையும் அறிவிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.    

சதாஹரித நிறுவனத்தின் தூரநோக்கின் எதிர்காலத்தை இச்சாதனை மிகத் தெளிவாக பிரதிபலிப்பதுடன், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் பரிணாமத்தின் மீதான ஆற்றல் மற்றும் தொழிற்துறையை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்லும் அதேசமயம், நிலைபேணத்தகு வனவியல் மற்றும் விவசாயத்தின் மூலமாக பசுமை முதலீடுகளை ஊக்குவிக்கும் அதன் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது. நிறுவனத்தின் முயற்சிகள் வல்லப்பட்டை, சீமைத்தேக்கு (மகோகனி), சந்தனம், தேக்கு மற்றும் வெனிலா போன்றவற்றை நிலைபேணத்தகு மூலங்கள் மூலமாக சர்வதேச சந்தைகளுக்காக தோற்றுவிக்க உதவியுள்ளதுடன், காட்டை நம்பியிருப்பதை குறைத்து, அதனுடன் தொடர்புபட்ட காடழிப்பைக் குறைத்து, இயற்கைச் சூழல் கட்டமைப்புக்களின் சீர்குலைவையும் குறைக்க வழிவகுக்கின்றது.     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here