‘இலங்கையின் அதிகம் அறியப்படாத உணவுகள்’ பிரசாரம் UNDP மற்றும் WFP Sri Lanka சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து ஆரம்பித்து வைப்பு

3

இலங்கையில் பயன்படுத்தப்படாத, பயிர் உணவுகளை ஊக்குவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சு, UNDP மற்றும் WFP ஆகியன இணைந்து விரிவான ஊக்குவிப்பு பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து அதிக போசணை நிறைந்த, குறைவான பயன்பாட்டைக் கொண்ட பாரம்பரிய பயிர் உணவுகளை தினசரி உணவுகளில் சேர்ப்பதை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான பிரசாரத் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்துள்ளன.

‘இலங்கையின் அதிகம் அறியப்படாத உணவுகள்’ திட்டமானது, உயிர்ப் பல்வகைமை பாதிப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் போசாணை கொண்ட உணவுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகிய இரட்டை சவால்களைச் எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரசாரத் திட்டமாகும். இந்த ஊக்குவிப்பு பிரசாரமானது Global Environment Facility (GEF) அமைப்பினால் நிதியளிக்கப்படுகின்ற Early Action Support (EAS) திட்டத்தின் மூலம் நேரடியாக ஆதரவளிக்கப்படுகிறது. இது தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளில் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் உலகளாவிய உயிர்ப் பல்வகைமைக் கட்டமைப்பை இலங்கை செயற்படுத்துவதை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நேற்று (20) இடம்பெற்ற இந்த பிரசார நிகழ்வின் ஆரம்ப விழாவில் அமைச்சுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான துணை வதிவிட பிரதிநிதி திருமதி மாலின் ஹெர்விக்; உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான நாட்டு பணிப்பாளர் a.i. ஜெரார்ட் ரெபெல்லோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், சுற்றுலாத் துறை, கல்வித்துறை மற்றும் அடிப்படை மட்டத்திலுள்ள தொழில்முனைவோர் உள்ளிட்ட அரச, தனியார் துறையின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பிரசார திட்டத்தின் முக்கிய நடவடிக்கைகளில், பயன்படுத்தப்படாத, போசணை நிறைந்த பயிர்களைக் கொண்ட உணவுத் தயாரிப்பு செய்முறை புத்தகத்தை (Recipe) வடிவமைத்து விநியோகிப்பதும் அடங்குகின்றது. உலக உணவுத் திட்டத்தின் (WFP) தேசிய ரீதியிலான பாடசாலை உணவுத் திட்டத்திற்கான உணவு வழங்குநர்களுக்கு உரிய கருவிகள், அது தொடர்பான அறிவு, சுயமாக உற்பத்தி செய்வதற்கான ஆதரவை வழங்கும், ‘வீட்டில் தயாரிக்கப்பட்ட பாடசாலை உணவு’ (Home-Grown School Feeding – HGSF) திட்டத்தின் பங்கேற்பாளர்களாக உள்ளவர்களிடையே இந்த செய்முறை புத்தகம் விநியோகிக்கப்படும். இது பாடசாலைகளில் வழங்கப்படும் உணவுகளில் அதிகம் அறியப்படாத உணவுகளை சேர்ப்பதற்கு உதவும்.

தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெறும் பிராந்திய நிகழ்வுகள் உள்ளூர் சமூகங்களை பங்குபற்றச் செய்யவும், பிராந்திய ரீதியில் அதிகம் அறியப்படாத உணவுப் பயிர்கள் கொண்டுள்ள போசணைப் பெறுமதி மற்றும் உயிர்ப் பல்வகைமை பெருக்கத்திற்கு அவற்றின் முக்கியத்துவம் தொடர்பான அறிவை வழங்கும் அமர்வுகளை நடத்தவும் உதவும்.

Thema Collection ஆனது, உள்ளூர் சமூகங்களுக்கு சமையல் செயல்விளக்கங்களை வழங்குவதன் மூலம் இப்பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் என்பதுடன், விருந்தோம்பல் துறையில் உள்ள மாணவர்களின் பங்கேற்புடனும் ஈடுபடுத்தலுடனும் அதனை வழிநடத்தும். தம்புள்ளை அலியா ரிசார்ட்டில் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், போசணை மற்றும் அதிகம் அறியப்படாத உணவுகளைத் தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விசேட அமர்வுகள் நடத்தப்படும்.

வணிக ரீதியாக அதிகளவில் வளர்க்கப்படாத உணவுப் பயிர்களை குறைவாகவே உட்கொள்ளும் நகர்ப்புற சமூகங்களிடையே இந்த உணவுகளைப் பழக்கப்படுத்தும் வகையில், கொழும்பில் உள்ள பல இடங்களிலும் இச்செயற்படுத்தல் நடவடிக்கைகள் நடைபெறும். இந்தப் பிரசாரம் இடம்பெறும் காலத்தில் பிரபல உணவு தயாரிப்பாளர்களுடன் இணைந்து நடத்தப்படும் ஒன்லைன் சமையல் போட்டிகளுடன் இது நிறைவடையும்.

குறித்த விடயம் தொடர்பில் UNDP இன் தலைமைத்துவம் பற்றி கருத்து தெரிவித்த பிரதி வதிவிடப் பிரதிநிதி திருமதி மாலின் ஹெர்விக், “அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையால் பல்வேறு சமூகங்கள் போராடி வருகின்றன. கட்டுப்படியான விலையிலும் எளிதில் வளர்க்கக்கூடியதுமான, அதிகம் அறியப்படாத, போசணை நிறைந்த பயிர்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலம், விலையுயர்ந்த உணவு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, வீட்டு உணவு விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும். இது போன்ற கூட்டுப் பிரசாரங்கள் மூலம், அதிக போசணை மதிப்புள்ள, அதிகம் பயன்படுத்தப்படாத பயிர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம். இது உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளையும் உருவாக்கும் அதே நேரத்தில் எமது உயிர்ப் பல்வகைமையையும் பாதுகாக்கிறது”. என்றார்.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கையின் நாட்டுக்கான பணிப்பாளர் ai, ஜெரார்ட் ரெபெல்லோ, பல்வேறு வகையான சத்தான மற்றும் நிலைபேறான முறையில் வளர்க்கப்படும் உணவுகளை அணுகுவது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை அம்சமாகும் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த பிரசாரத்தின் மூலம், இவ்வாறான உணவுகளை எமது அன்றாட உணவுப் பழக்கங்களின் ஒரு பகுதியாக மாற்றியமைக்கவும், மக்களுக்கும் பூமிக்கும் ஆரோக்கியமான, நெகிழ்வுத் தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதனையும் நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

இந்த பிரசார திட்டமானது, இலங்கையின் உயிர்ப் பல்வகைமைப் பெருக்கத்தின் வேகமான சரிவு மற்றும் அது எதிர்கொள்ளும் பல அச்சுறுத்தல்கள்; மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே போசாக்கான உணவுக்கான அணுகல் ஆகிய இலங்கையில் காணப்படும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. பயன்படுத்தப்படாத உணவுப் பயிர்களை பிரபலப்படுத்துவதன் மூலம், இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுத் தாவரங்களுக்கு வணிக மதிப்பை உருவாக்குவதையும், அதன் மூலம் அவற்றின் விளைச்சலை அதிகரிப்பதற்கான ஊக்கத்தையும் இறுதியில் அவற்றைப் பாதுகாப்பதையும் இந்த பிரசாரத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிர்களை வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம் அல்லது வணிக விளைச்சல் பயிர்களாக மாற்றியமைக்கலாம் எனும் இரண்டு தெரிவுகளும் இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே கட்டுப்படியான விலையில் மற்றும் செலவு குறைந்த ஊட்டச்சத்து ஆதாரங்களை வழங்க உதவும்.

இந்த பிரசாரத் திட்டம் 2025 ஜனவரி 21 முதல் பெப்ரவரி 25 வரை இடம்பெறும். மேலதிக தகவல்களை UNDP Sri Lanka மற்றும் WFP Sri Lanka சமூக ஊடக பக்கங்கள் ஊடாக பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here