இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2024 – ஜுன் 29 முதல் ஜுலை 01 வரை  

21

முதற்தடவையாக இடம்பெறவுள்ள இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2024 நிகழ்வு, 2024 ஜுன் 29 முதல் ஜுலை 01 வரை பிரசித்தி பெற்ற பெல்மதுளை கிரான்ட் சில்வர் ரே ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் தலைநகரம் என வர்ணிக்கப்படுகின்ற இரத்தினபுரியின் மையத்தில் இடம்பெறவுள்ள இந்த ஆர்வமூட்டுகின்ற இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களின் தனித்துவமான கண்காட்சி தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (National Gem and Jewellery Authority – NGJA) ஏற்பாட்டுடன் நடத்தப்படுவதுடன், இப்பிராந்தியத்தின் செழுமையான இரத்தினக்கல் பாரம்பரியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, புதிய பொருளாதார வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே அதன் நோக்கமாகும்.      

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிற்துறையின் ஒழுங்குமுறையை பேணி, அதனை ஊக்குவிப்பதில் முக்கியமான செயல்பாட்டாளராகத் திகழ்ந்து வருகின்ற NGJA, இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக பத்திரிகையாளர் மாநாடொன்றை ஜுன் 12 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்திருந்தது. NGJA, கைத்தொழில் அமைச்சு, இரத்தினபுரி இலங்கை இரத்தினக்கல் முகவர்கள் மற்றும் அகழ்வாளர்கள் சங்கம், இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் அகழ்வாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறுபட்ட சங்கங்கள், மற்றும் தொடர்புபட்ட ஏனைய பல்வேறு தரப்பினர் இடையில் காணப்படுகின்ற விரிவான ஒத்துழைப்பு தொடர்பில் இப்பத்திரிகையாளர் மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டது. இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதிகள் மூலமாக 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ஈட்டுவது என்ற இலங்கையின் இலக்கினை எட்டுவதில் இந்த ஆண்டு கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், உயர் தரம் வாய்ந்த இரத்தினக்கற்களைப் பெற்றுக்கொள்வதற்கான முன்னணி நகரமாக இரத்தினபுரியின் அந்தஸ்தை ஆணித்தரமாக நிலைநாட்டவும் வழிகோலும்.

இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. விராஜ் டி சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இக்கண்காட்சி நிகழ்வானது செழுமையான எமது இரத்தினக்கல் மற்றும் ஆபரண பாரம்பரியத்தை வெளிக்காண்பிப்பது மட்டுமன்றி, சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக மையமாக இரத்தினபுரியை நிலைநிறுத்தும் நோக்குடன் நாம் உள்ளமையால், எமது தொழில்துறையின் எதிர்காலத்தைச் செதுக்குவதில் இந்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கும். ஆகவே, இந்த வியப்பூட்டும் கண்காட்சியை நேரிலே வந்து கண்டுகளிக்குமாறு இரத்தினக்கல் ஆர்வலர்கள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இரத்தினபுரியின் இரத்தினக்கற்களின் மகிமை மற்றும் இலங்கையின் ஆபரண வேலைப்பாட்டின் கைவண்ணம் ஆகியவற்றின் முழுமையான கண்காட்சியான இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2024 நிகழ்வுக்கு உங்களை வரவேற்க ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.         

“இரத்தினக்கற்களின் நகரம்” என பொதுவாக சிங்களத்தில் அறியப்படுகின்ற இரத்தினபுரி, அதன் அரிய இரத்தினக்கற்களுக்காக, குறிப்பாக குருந்தம் குடும்பத்தைச் சேர்ந்த நீலமாணிக்கக் கற்களுக்காக சர்வதேச ரீதியாக புகழ்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுடன், இரத்தினபுரியின் இரத்தினக்கல் தொழில்துறையானது இலங்கைப் பொருளாதாரத்தின் அத்திவாரமாக உள்ளதுடன், இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2024 நிகழ்வு கண்ணைக்கவரும் நிகழ்வுகள் மற்றும் காட்சிகளுடன் இந்த பாரம்பரியத்தின் மகத்துவத்தை கௌரவிக்கும்.       

திரு. டி சில்வா அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “இரத்தினபுரி சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியானது ஒரு சர்வதேச நிகழ்வாக அமையவுள்ளதுடன், சீனா, இந்தியா, வியட்னாம், ஜேர்மனி, தாய்லாந்து மற்றும் மேலும் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் குழுவை ஈர்க்கவுள்ளது. சர்வதேசரீதியாக வருகை தந்து பங்கேற்கவுள்ள இவர்கள், சர்வதேச இரத்தினக்கல் தொழிற்துறைக்கு பயனளிக்கும் வகையில் கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வளர்த்து, செழுமையான அறிவு, நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்தை கொண்டு வருகின்றனர். ஆகவே, இத்தொழிற்துறை வல்லுனர்கள், வணிகர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சர்வதேச ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்தி, ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான மகத்தான வாய்ப்பினையும் இக்கண்காட்சி வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.      

இலங்கையின் மிகச் சிறந்த இரத்தினக்கற்கள் மற்றும் உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படுகின்ற சில அரிய வகை கற்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஆபரண கண்காட்சி பாரம்பரிய கைவண்ணத்தை நவீன கலைநயத்துடன் இணைத்து வழங்கும் நுணுக்கமான வடிவமைப்புக்களை காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் உள்நாட்டு கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்கு இது உதவி, இரத்தினபுரியை சர்வதேச இரத்தினக்கல் வணிக மையமாக நிலைநிறுத்தும். கண்காட்சியின் போது இடம்பெறும் நேரடி விளக்கமளிப்புக்கள் இரத்தினக்கற்களை வெட்டுவது மற்றும் ஆபரணங்களை வடிவமைப்பது ஆகியவற்றில் கைதேர்ந்தவர்களின் கைவண்ணத்தை நேரடியாக காணும் வாய்ப்பினை இதில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கும். இரத்தினவியல் தொடர்பாக ஆழமாக ஆராயும் அமர்வுகள், இரத்தினபுரியில் இரத்தினக்கல் அகழ்வின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இத்தொழிற்துறை உள்வாங்கும் நிலைபேணத்தகு நடைமுறைகள் தொடர்பான அறிவூட்டல் அமர்வுகளும் அடங்கும்.   

பரந்த வகைப்பட்ட அரிய கற்கள் மற்றும் ஆபரணங்களை காட்சிப்படுத்தும் வகையில் 80 உயர் பெறுமதி கொண்ட கண்காட்சிக்கூடங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறும். இதை விட, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்கள் தம்முடைய தயாரிப்புக்களை ஊக்குவிக்க உதவி, சர்வதேச சந்தைகளை கண்டறிந்து கொள்வதற்காக 12 கண்காட்சிக்கூடங்கள் ஒதுக்கப்படும். இந்த விரிவான தெரிவுகள் பார்வையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பல்வகைப்பட்ட இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வடிவமைப்புக்களை கண்டறியும் வாய்ப்பினை உறுதி செய்யும்.

இரத்தினக்கல் அகழ்வு, வர்த்தகம் மற்றும் கைவினை வேலைப்பாடு ஆகியவற்றில் அதியுயர் தராதரங்களை உறுதி செய்து, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிற்துறையின் ஒழுங்குமுறையை நிர்வகித்து, அதனை ஊக்குவிப்பதில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது. மகத்துவம் மற்றும் நிலைபேண்தகமை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள NGJA ஆனது உயர்ரக இரத்தினக்கற்களுக்கான இடமாக இலங்கையின் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்.    

இரத்தினபுரி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2024 மற்றும், இதில் கண்காட்சியாளராகவோ அல்லது பார்வையாளராகவோ பங்குபற்றுவது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள தயவு செய்து +94713841253 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது https://timeztap.com/gem/ என்ற தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here