அம்பேவெல தனது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துடன், ஒப்பற்ற உயர் தர பால் தயாரிப்புக்களை வழங்குகின்றது 

21

Lanka Milk Foods (CWE) PLC நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற அம்பேவெல பால் தயாரிப்புக்கள், அவற்றின் புத்தம்புதிய தன்மை மற்றும் தரம் காரணமாக அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகத் திகழ்ந்து வருகின்றன. இலங்கையின் பசுமையான மேட்டு நிலங்களில் உற்பத்தியாகின்ற அம்பேவெல தயாரிப்புக்கள் அனைத்தும் பண்ணையிலிருந்து குடும்பங்களை எட்டும் வரையில், அதியுயர் தரம் கொண்ட பால் தயாரிப்பு பூரிப்புக்கள் என்பதை உறுதி செய்வதற்காக மிகக் கவனமான செயல்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.   

மிகக் கடுமையான அதிநவீன தராதரங்களை பூர்த்தி செய்யும் வகையில், அம்பேவெல பால் பண்ணை சர்வதேசரீதியாக சான்றுபடுத்தப்பட்ட செயல்முறைகளைப் பின்பற்றுவதுடன், புத்தம்புதிய தன்மையைக் கொண்டிருப்பதற்காக, பால் விரைவாக குளிர்விக்கப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டு, போக்குவரத்தின் மூலமாக கொண்டு செல்லப்பட்டு, மற்றும் பொதி செய்யப்படுகின்றது. பால் கறத்தல் முதல் பொதி செய்யப்படுவது வரை, ஒட்டுமொத்த செயல்முறையும் விரைவாக மேற்கொள்ளப்படுவதுடன், தரம் தொடர்பான கண்காணிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஆய்வுகூட சோதனைகளின் போது சின்னஞ்சிறு மாறுபாடுகள் இனங்காணப்படும் சமயத்தில் அந்த தயாரிப்பு தொகுதி நிராகரிக்கப்படுவதுடன், புத்தம்புதிய, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த தயாரிப்புக்கள் மாத்திரமே நுகர்வோரைச் சென்றடைவது உறுதி செய்யப்படுகின்றது.    

பண்ணைகளிலும் அதியுயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் செயற்பாடு (Ultra High Temperature – UHT) 140 பாகை வெப்பஅலகில் 4 செக்கன்களுக்கு இடம்பெற்று, ஊட்டச்சத்துக்கள் பேணிப் பாதுகாக்கப்படும் அதேசமயம், நோய்க்கிருமிகளை ஒழித்தலின் போது தீய்ந்து போன சுவை தென்படுவதும் தவிர்க்கப்படுகின்றது. அதிசிறந்த முறையிலான பொதியிடலுடன், சாதாரண வெப்பநிலையில் ஆறு மாதங்களுக்கு வைத்துப் பேணப்படக்கூடிய பால் தயாரிப்பு வெளிவருகின்றது. விஞ்ஞானரீதியிலான மகத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பானது இலங்கையில் ISO சான்று அங்கீகாரம் பெற்ற UHT பால் தயாரிப்பு தொழிற்சாலையில் முன்னோடி என்ற அந்தஸ்தை அம்பேவெல சம்பாதிப்பதற்கு வழிவகுத்துள்ளது.          

அம்பேவெல பாலுடன் ஒரு போதும் பால்மா அல்லது வேறு எந்தவொரு மாற்றுக்களும் கலப்படம் செய்யப்படுவது கிடையாது என்பது மற்றுமொரு தனித்துவமான காரணியாகும். பால் அதன் தூய வடிவத்திலேயே கிடைக்கப்பெறுவதுடன், மிகக் கூடுதலான அளவில் ஆடை சதவீதங்களையும், பால் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அம்பேவெல பண்ணையிலுள்ள ஃப்ரீசியன் (Friesian) மற்றும் அயர்ஷயர்ஸ் (Ayrshires) பசுக்கள் உலகில் மிகச் சிறந்த பசு இனங்களாக கருதப்படுவதுடன், அதியுயர் தர பாலைப் பெற்றுக்கொள்வதற்காக செயற்கை சினைப்படுத்தலுக்கு மிகச் சிறந்த சீமென்ஸ் இனங்கள் (siemens) தேர்ந்தெடுக்கப்படுகின்றன.           

அம்பேவெல நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நிறுவனத்தின் வலுவான குறிக்கோள் குறித்து கருத்து வெளியிடுகையில், “நாம் செயல்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, இலங்கையில் பாலுற்பத்தித் தொழிற்துறையை மேம்படுத்தி, அதன் தேசிய விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் பங்களித்து வந்துள்ளோம். நாட்டின் தேவையை விளங்கிக் கொண்டுள்ள நாம், இறக்குமதிகளைக் குறைப்பதற்காக உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.

பண்ணையிலிருந்து குடும்பங்களை சென்றடையும் வரை, நுகர்வோரும், தேசமும் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய உயர் தர, கலப்படமற்ற பாலை வழங்குவதில் அம்பேவெல தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here