அம்பேவலை பாற்பண்ணைக்கான (Ambewela Dairy Farm) ஜனாதிபதியின் விஜயம் பாலுற்பத்தியில் அடுத்த பாரிய முன்னேற்றத்திற்கான தூண்டுதலாக அமைந்துள்ளது

30

பாலின் நலச்செழுமைக்கு அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும், அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர்போனதும், பாலுற்பத்தியை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்பு கொண்டதுமான அம்பேவலை பாற்பண்ணைக்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார். 2022 டிசம்பரில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வு விஜயத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் தற்போது விசேட விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அவர்கள் கடந்த முறை விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அம்பேவலையில் விரிவான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்ததுடன், இப்பண்ணை கணிசமான அளவில் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு அதுவே தூண்டுதலாக அமையப்பெற்றது.    

ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் அம்பேவலை பாற்பண்ணைக்கு வருகை தந்த சமயத்தில், முகாமைத்துவ சபையினர், அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களுடன் இணைந்து அவரை அன்புடன் வரவேற்றனர். வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், புதிதாக இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தி முயற்சிகளின் மேம்பாடு குறித்து மீளாய்வு செய்ததுடன், மேம்பாடுகள் குறித்து விசேடமாக குறிப்பிட்டதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு இப்பண்ணையின் முக்கியமான பங்களிப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார். ஊழியர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுடன் அளவளாவிய ஜனாதிபதி அவர்கள் இப்பண்ணையின் அபிவிருத்திக்கு தேவையானவற்றை புரிந்து கொண்டு, அவற்றுக்கு உதவுவதில் தனது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி அவர்களின் விஜயத்தின் போது 1943 ஆம் ஆண்டில் இப்பண்ணை ஆரம்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 2001 இல் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் அம்பேவலை பண்ணையின் வளர்ச்சியை இச்சந்தர்ப்பத்தில் முகாமைத்துவ சபையினர் அவருக்கு எடுத்துக்கூறினர். இப்பண்ணை எத்தகைய அளவுக்கு விரிவான நவீனமயமாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, நவீன பாலுற்பத்தி மற்றும் பண்ணை தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றில் இலங்கையிலும், தெற்காசியாவின் மத்தியிலும் தன்னை ஒரு முன்னிலைக்கான மையமாக ஸ்தாபித்துள்ளதை அவர் விளக்கினார். இப்பண்ணையின் அபிவிருத்திப் பயணத்தை செதுக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களின் ஓயாத ஆதரவுக்காக அணியினர் அவருக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்தினர்.   

2022 டிசம்பரில் ஜனாதிபதி அவர்களின் விஜயத்தின் பிரதிபலிப்பாக, அச்சமயத்தில் நாளாந்த பாலுற்பத்தியின் அளவு கிட்டத்தட்ட 40,000 லீட்டர்களாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. எனினும், ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து இடம்பெற்ற நவீனமயமாக்கல் முயற்சிகளின் பலனாக, இந்த ஆண்டு நிறைவில் 52,000 லீட்டர்கள் தினசரி பாலுற்பத்தியை எட்டும் இலக்கினை நோக்கி இந்நிறுவனம் நகர்ந்து வருவதுடன், இது 30% என்ற கணிசமான அளவிலான அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், உயர் தர கறவைப்பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் கால்நடை நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தையும் தன்னியக்கமயமாக்கம் செய்தல் ஆகிய முயற்சிகளுடன், வருடாந்த பாலுற்பத்தியின் அளவை படிப்படியாக 20 மில்லியன் லீட்டர்களாக அதிகரிக்கச் செய்வதே இப்பண்ணையின் இலக்காகும்.     

ஜனாதிபதி அவர்கள் வருகை குறித்து முகாமைத்துவத்தினர் கருத்து வெளியிடுகையில், “மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களை வரவேற்றமை எமக்கு கிடைத்த கௌரவமாகும். அவருடைய ஆர்வத்துடனான நுண்ணறிவுகள், எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு உண்மையிலேயே மதிப்பைக் கூட்டியுள்ளன. பாலுற்பத்தியில் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தின் மீதான எமது அர்ப்பணிப்புக்கு அம்பேவலை பாற்பண்ணையின் வளர்ச்சி சிறந்ததொரு சான்றாகும். நவீன தொழில்நுட்பங்கள் மீது நாம் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், வினைதிறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக செயல்முறைகளையும் இயந்திரமயப்படுத்தியுள்ளோம். ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், எமது தீர்க்கமான உற்பத்தி இலக்குகளை எட்டி, இலங்கையின் விவசாயத் துறைக்கு மேலும் பங்களிக்கும் எமது ஆற்றல் மீது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டனர்.  

ஜனாதிபதி அவர்கள் சமீபத்தில் மேற்கொண்ட விஜயத்தின் போது வழங்கிய பணிப்புரைகளுக்கு அமைவாக, பாலுற்பத்தியை மேலும் மேம்படுத்தி, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி, எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான மதிப்பீட்டுப் பணிகளை அம்பேவலை பாற்பண்ணை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. பண்ணையின் உற்பத்தி ஆற்றலை வலுப்படுத்தி, தேசிய பாலுற்பத்தித் துறைக்கான தனது பங்களிப்பை மேம்படுத்துவதே இந்த மூலோபாய நகர்வின் நோக்கமாகும். இலங்கை பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களுக்கு பெறுமதிமிக்க நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காகவும் இப்பண்ணை தனது கதவுகளைத் திறந்துள்ளது.   

கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பிரயாணிகளையும் அம்பேவலை பாற்பண்ணை தொடர்ந்து ஈர்த்து வருவதுடன், வருகை தருகின்றவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, வளமான அனுபவத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்கதொரு தினமாக 9,000 விருந்தினர்களை ஒரே தினத்தில் இப்பண்ணை வரவேற்றதுடன், இது அடைந்துவருகின்ற பிரபலத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மகத்துவத்தின் மீது பண்ணை கொண்டுள்ள ஈடுபாட்டையும், பாலுற்பத்தித் துறையில் முன்னிலையாளர் என்ற அதனது வகிபாகத்தையும் இம்முயற்சிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களின் தற்போதைய ஆதரவு மற்றும் மூலோபாய வழிகாட்டல் ஆகியன இப்பண்ணையின் எதிர்கால வெற்றியை முன்னெடுத்து, தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்புக்களை மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் மிக அவசியமானதாக காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here