உள்ளக நோயாளர்களை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பில் உயர்ந்த தரத்தைப் பேணுவதில் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆசிரி குரூப் ஹொஸ்பிட்டல் நிறுவனம், அக்ரஹார மருத்துவ காப்புறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் விரிவான சலுகைகளை வழங்கும் நோக்கில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடன் முக்கியமான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
ஆசிரி வைத்தியசாலையின் பணிப்பாளரும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டொக்டர். மஞ்சுள கருணாரத்ன மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின பிரதம நிறைவேற்று அதிகாரி கமானி என்.லியனாராச்சி ஆகியோர் அண்மையில் நடைபெற்ற நிகழ்வின்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் சார்பிலும் பல்வேறு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் சாகல அபயவிக்ரம, செயற்பாட்டுக்கான உதவிப் பொது முகாமையாளர் சமில் துஷார, காப்புறுதிக்கான உதவிப் பொது முகாமையாளர் நிமாலி பத்திரன, சட்ட உதவி முகாமையாளர் பிரதிபா வெலிகன்ன, சந்தைப்படுத்தலுக்கான உதவி முகாமையாளர் நுவன் திசாநாயக்க, பதில் நிதி உதவிப் பொது முகாமையாளர் தம்மிகா வீரக்கோன் ஆகியோர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
ஆசிரி வைத்தியசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நிஹால் ரத்னாயக்க, பிரத செயற்பாட்டு அதிகாரி இந்திரேஷ் பெர்னாந்து, வணிக முன்னேற்றத்தின் குழுத் தலைவர் பாத்தியா ஜயசிங்க, அரசாங்கத் துறை வணிக முன்னேற்றத்துக்கான தலைவர் தனஞ்சயப பண்டார தெல ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிரி வைத்தியசாலையினால் வழங்கப்படும் உறுதியான சுகாதார நன்மைகள் மற்றும் விரிவான சுகாதார சேவைகளையும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் அனைத்து அக்ரஹார உறுப்பினர்களுக்கும் வழங்குவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும். சமூகத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய நீண்டகால ஒத்துழைப்புக்களைக் கட்டியெழுப்புவதில் ஆசிரி வைத்தியசாலை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்ததொரு வெற்றியாக இது அமைந்துள்ளது. அரசாங்க சேவையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதேநேரம், சிறந்த அணுகல், அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையைக் கொண்ட சுகாதார சேவையை வழங்குனர் என்ற ஆசிரி வைத்தியசாலையின் நிலையை இந்த ஒப்பந்தம் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
அக்ரஹார உறுப்பினர்கள் ஆசிரி குழுமத்தின் எந்தவொரு வைத்தியசாலையிலும் அல்லது அவற்றின் ஆய்வுகூடங்களில் சிகிச்சை பெறுவதற்கான தகுதியைப் பெறுகின்றமை இதில் முக்கியமான விடயமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்கள் பணம் செலுத்தாது வைத்தியசாலையில் அனுமதிக்கான வாய்ப்பைப் பெறுவதுடன், ஆசிரி வைத்தியசாலையின் சேவையைப் பெறுவதற்கு முற்பணம் செலுத்தவேண்டிய அவசியமின்றி தடையற்ற அணுகல் ஏற்படுத்தப்படுகின்றது. இங்கு மருத்துவ சேவையை நாடுபவர்களுக்கு நிதிச் சுமை குறைக்கப்பட்டு விலக்கப்பட்ட அனுமதிப்புக் கட்டணத்திலிருந்து உறுப்பினர்கள் நன்மை அடையலாம். அறைகளுக்கான கட்டணத்தில் அதிக விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அக்ரஹார உறுப்பினர்கள் ஆசிரி வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளும் பல்வேறு வெளியக மற்றும் உள்ளக சேவைகளுக்குத் தனித்துவமான விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்வார்கள். இதற்கு மேலதிகமாக ஆய்வுகூட விசாரணைகள், தலையீட்டு கதிரியக்கவியல், PET ஸ்கான் மற்றும் கதிரியக்க சிகிச்சை போன்றவற்றுக்கும் தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 10 கிலோமீற்றர் தூரத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து வைத்தியசாலையின் அனுமதியை எதிர்பார்க்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்கள் இலவச அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கான மருத்துவ சேவையை மேலும் இலகுபடுத்தும்.
இந்தப் புதிய கூட்டாண்மை தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆசிரி ஹெல்த்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர். மஞ்சுள கருணாரத்ன குறிப்பிடுகையில், “அரசாங்க ஊழியர்களுக்கு இணையற்ற சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. சுகாதாரப் பராமரிப்புக்கான ஒத்துழைப்பில் இந்தக் கூட்டாண்மை புதியதொரு தரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என்றார்.
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கமானி என்.லியனாராச்சி குறிப்பிடுகையில், “எமது உறுப்பினர்களுக்கு விரிவான சுகாதாரபராமரிப்பு நன்மைகளை வழங்க ஆசிரி ஹொஸ்பிட்டலுடன் பங்குடமையை ஏற்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அக்ரஹார பயனாளிகள் உரிய நேரத்துக்கு, வினைத்திறனான மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்கு இணங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. நீண்டகால ஒத்துழைப்பு சமூகத்துக்கு நன்மையளிக்கும் என நாம் நம்புகின்றோம். மருத்துவ காப்புறுதிக்கான கோரிக்கைகளின் போது சரியான ஆவணங்களை வழங்குமாறும் உறுப்பினர்களை நாம் கேட்டுக் கொள்வதுடன், அவ்வாறு வழங்குவதன் ஊடாக மீளளிக்கும் செயற்பாட்டை விரைவில் பூர்த்திசெய்ய முடியும்” என்றார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சுகாதாரப் பராமரிப்பில் அனுபவம் கொண்டுள்ள ஆசிரி ஹெல்த், ஆசிரி சேர்ஜிக்கல் வைத்தியசாலை, ஆசிரி மெடிக்கல் வைத்தியசாலை, ஆசிரி சென்ரல் வைத்தியசாலை, மாத்தறை ஆசிரி வைத்தியசாலை, காலி ஆசிரி வைத்தியசாலை, கண்டி ஆசிரி வைத்தியசாலை மற்றும் ஆசிரி ஆய்வுகூட சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். அனைத்து வசதிகளும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால் அனைத்துச் செயற்பாடுகளும் சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஒழுக முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் அக்ரஹார திட்டமானது இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்காகக் காணப்படும் மிகப்பெரிய சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களில் ஒன்றாகும். அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்ற மருத்துவக் காப்புறுதி முயற்சி என்ற ரீதியில், அக்ரஹார மருத்துவ செலவுகளுக்கான நிதி ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. இதன் மூலம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ தேவையின் போது அவர்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்துகொண்டு தேவையான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதற்கான அணுகல் கிடைக்கின்றது.